• Login / Register
  • கட்டுரைகள்

    தமிழ் புத்தாண்டியில் தமிழர் வாழ்வு விடியட்டும்!

    தமிழ் புத்தாண்டில் தமிழர் வாழ்வில் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்றைய தைப்பொங்கல் பண்டிகை கோலகலமாக கொண்டாடுவோம்.

    ஈழ நிலத்திலும் தமிழக பெரும்பரப்பிலும் உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் பரவி வாழ்ந்து வந்தாலும் தமிழர்களின் வாழ்வு ஏதோ ஒருவகையில் இருண்டே கிடக்கிறது.

    ஈழ நிலத்தில் தொடங்கிய உரிமைப்போராட்டம் நீதிக்கான போராட்டமாக மாறி இன்று இருப்புக்கான போராட்டமாக மாறியுள்ள நிலையானது மீளவும் வரலாற்று துயர்மிகுந்த காலத்தை நோக்கியதாக ஈழத்தமிழர் வாழ்வின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.

    சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் கோரப்பிடிக்குள் சிக்குண்டுள்ள ஈழத்தமிழர்களின் நிலைதான் இவ்வாறு என்றால் ஆட்சி - அதிகாரம் கைவசம் கிடைத்த போதிலும் அவ் அதிகாரம் தமிழர் வசம் கிடைக்காத நிலையில் தாய்த்தமிழக உறவுகளும் பல்வேறு வழிமுறைகளில் பறிக்கப்பட்ட வாழ்வுரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலை.

    ஈழம், தமிழகம் என தாய் நிலத்து வேர் பிரிந்து உலகெங்கும் கிளை பரப்பி கோடான கோடி தமிழர்கள் வாழ்ந்து வரினும் தாய் நிலம் தமிழர் தலைநிமிர்வுக்கு ஆதாரமாக இல்லாமை வரலாற்று துயரமாக தொடரும் நிலையானது புலம்பெயர் வாழ் தமிழர்களையும் ஏக்கங்களுடன் வாழும் நிலையினை ஏற்படுத்தியுள்ளது.

    புதிய ஆண்டில் ஈழம், தமிழகம், புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களின் தலைநிமிர்வுக்காகவும் வாழ்வு வளம் பெறவும் விடியல் பிறந்திடவும் எமக்குள் இருக்கும் தன்முனைப்பு நீங்கப்பெற்று தமிழர்களாக ஒன்றிணைவோம்.

    "நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள்; நாடு நமக்கு பெரிதானால் நாம் எல்லாம் அதற்குச் சிறியவர்களே.. எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது." என்ற தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது சிந்தனை வரிகளை வாழ்க்கை மொழியாக்கி பிறக்கும் புத்தாண்டில் தமிழர் வாழ்வில் விடியல் பிறந்திட செயலாற்றுவோம் என இன்றைய நாளில் மண்ணுறங்கும் மாவீரர்களின் கல்லறைகள் மீது கரம் வைத்து உறுதிஏற்போம்.

    உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தைப் பொங்கல் நல் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

    TNMedia24.com இணையம்
    15.01.2024

    Leave A Comment