விவசாயிகளுக்கு அதிக மகசூல் தரும் புளிய மரக்கன்றுகள்: வன மரபியல் அதிகாரி தகவல்
அதிக மகசூல் தரும் இனிப்பு, புளிப்பு, சிவப்பு ஆகிய புளிய மரக்கன்றுகளை இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.இவை அடுத்தாண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை, இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன விஞ்ஞானி, முனைவர் மாயவேல் கூறியதாவது:- இனிப்பு புளி, புளிப்பு புளி, சிவப்பு புளி என, மூன்று வகை புளிய மரங்கள் உள்ளன.நாடு முழுதும் நடந்த 30 ஆண்டு ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கு பின், அதிக மகசூல் கொடுக்கும் புளிய மர நாற்றுகள், மரபு பண்ணையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், அழியும் தருவாயில் உள்ள இவ்வகை மரங்கள் இனி காப்பாற்றப்படும்.
நீளமான காய், அதிக மகசூல் கொடுக்கும் புளிப்பு சுவை மிக்க புளிய மரக்கன்றுகளை, மரபுப்பண்ணையில் உருவாக்கி வைத்துள்ளோம். ஐந்து முதல், ஆறு ஆண்டுகளில் காய் பிடிக்க துவங்கும். பொது இடங்களில் நட்டு வளர்த்தால், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு வருவாய் கிடைக்கும். ஆறு மற்றும் குளக்கரையோரம் நட்டு, இரண்டு ஆண்டுகள் மட்டும் பராமரித்தால் போதும். நிலையான வருவாய் கொடுக்கும். ஒரு மரம், 100 கிலோ அளவுக்கு புளியை மகசூல் செய்யும். 100 கிலோ காயில், 42 கிலோ புளி கிடைக்கும். ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 4,500 ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்.
இனிப்பு புளி மகசூல் குறைவாக இருந்தாலும், அதிக வருவாய் கிடைக்கும். இவ்வகை புளி, ஓட்டுடன், கிலோ 300 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. சாதாரண புளிக்கு, கிலோவுக்கு, 20 ரூபாய் மட்டும் தான் விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
சிவப்பு புளி சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். தமிழகத்தின் பல்வேறு கோவில்களில், சிவப்பு புளிய மரங்களை முன்னோர்கள் வளர்த்துள்ளனர். ஆந்திராவில் உள்ள சர்ச், டில்லியில் உள்ள மசூதிகளிலும் சிவப்பு புளிய மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. மரங்களை பாதுகாக்க வேண்டி, வழிபாட்டு தலங்களில் நட்டு வளர்த்துள்ளனர்.
இதேபோல், அதிக எண்ணெய், கசப்பு தன்மை உள்ள, நிலையான காய்ப்பு தன்மையுடன் கூடிய வேப்பமரக்கன்றுகளையும் உருவாக்கியுள்ளோம். தற்போது உருவாக்கப்பட்டுள்ள நாற்றுகளை சோதனை அடிப்படையில் திருப்பூரில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் வாயிலாக நட்டுள்ளோம். அடுத்த ஆண்டு முதல் விவசாயிகளுக்கு கிடைக்கும். என்று அவர் கூறினார்.
Leave A Comment