"வெட்கம்" பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது..?
வெட்கம் என்ற உணர்வு பற்றிய புரிதல் இன்றைய காலத்தில் சற்று மாறுபட்டதாகவே காணப்படுகிறது. இன்று வெட்க உணர்வு என்பது வேண்டாத ஒன்றாகவும், பிற்போக்குத்தனமாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனால், இஸ்லாம் உயர்த்திக் கூறும் பண்பாக வெட்கம் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல. வெட்கம் இருந்தால் ஒரு முஸ்லிமின் இறையச்சம் சிறந்து விளங்கும். தவறுகளில் இருந்தும், தீயவற்றில் இருந்தும் அவனை வெட்கம் பாதுகாக்கும்.
வெட்கம் என்பது பெயர்ச்சொல் வார்த்தையாகும். இதற்குப் பொருள், பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்கமுடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு. மேலும் வெட்கம் இரண்டு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
1. நாணம்: தனது திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்துவதற்கு வெட்கப்படுவது. சிலர் திறமைசாலியாக இருப்பார்கள். ஆனால் தங்கள் திறமையை வெளிக்காட்ட வெட்கப்படுவார்கள்.
ஒரு பெண் பிற ஆண்களின் முன்பு தன்னை பாதுகாத்துக்கொள்ள நாணம் எனப்படும் வெட்கம் வழிகாட்டுகிறது.
2. அவமானம்: தவறு செய்வதற்குப் பயப்படுவது, மானம் கெட்ட செயல்களைச் செய்வதற்கு அஞ்சுவது. வெட்கம் என்ற உணர்வு இருப்பதால் மட்டுமே, மனித இனம் விபரீதங்களின் வீரியத்தை விட்டு விலகி நிற்கிறது. வெட்கம் விலகும் போது அந்தரங்கங்களும் பாழ்பட்டு போகும். ஆடைகள் அணிகிறோம், அந்தரங்கங்களை மறைத்துக் கொள்ள; மானத்தை பாதுகாத்துக் கொள்ள. இதை யாரும் மறுத்துச் சொல்வதில்லை. ஆனால் இன்றைய நாளில் ஆண், பெண் ஆடை அணிவதில் கூட கண்ணியங்கள் காற்றில் பறக்க விடப்பட்டிருக்கின்றன.
காரணம், வெட்கம் நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டதால் தானே. இன்றைய சூழ்நிலைகளின் தாக்கத்தால் மனங்கள் மாறுபட்டு சில மனித ஜென்மங்கள், வெட்கம் என்ற நல்ல பண்பை உதிர்த்துவிட்டு கலாசாரங்களை உதாசீனப்படுத்துவதால் தான் பண்பாடுகள் அழிவை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கின்றன.
நபிகளார் (ஸல்) நவின்றார்கள்: 'ஒவ்வொரு மார்க்கத்திற்கும் தனியே ஒரு சிறப்பு குணமுண்டு. இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பு குணம் வெட்கம் ஆகும்'. (நூல்கள்: இப்னுமாஜா, தப்ரானி) அனைத்து நபிமார்களும் வலியுறுத்திய கடமைகளில் ஒன்றாக வெட்க உணர்வு விளங்குகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும்.
வெட்கம் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும்". (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி) மக்கள் பெற்றுக்கொண்ட முந்தைய நபித்துவத்தின் முக்கியச் செய்தி, அதாவது - முன்வந்த நபிமார்கள் அனைவரும் கூறி வந்த செய்தி, "உனக்கு வெட்கமில்லையானால் நீ நாடியதைச் செய்து கொள்" என்பது தான், என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி) எனவே வெட்க உணர்வின் மீதான கவனக்குவிப்பு என்பது இன்றோ, நேற்றோ தோன்றிய விஷயமன்று. தொன்றுதொட்டு வாழையடி வாழையாக இறைத்தூதர்கள் மூலம் வலியுறுத்தப்பட்ட அழகிய பண்பியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
'நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப்பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாக இருந்தனர்' என்பது நபிமொழியாகும். (அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி), நூல்:புகாரி) நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. 'உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே' என்று அவர்கள் கூறுவார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி) வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும்.
கெட்ட வார்த்தையும், கடன் பெற்றவன் கடனைத் திருப்பி செலுத்த வேண்டும் என்ற கடமையுணர்வு, மானத்திற்கு அஞ்சிய வெட்கம் என்ற உணர்வு இருப்பதால் மட்டுமே. அன்னிய பெண்ணை கண்ணோடு கண் நேராக பார்க்க அச்சம் ஏற்படுகிறது என்றால், பாலியல் பாவங்கள் கூட தவிர்க்கப்படுகிறது என்றால், வெட்கம் என்ற உணர்வு இருப்பதால் மட்டுமே. இது குறித்து அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'வெட்கம் எப்பொருளில் இருந்தாலும் அது அப்பொருளை அழகாக்காமல் இருப்பதில்லை' என்று கண்மணி நாயகம் நவின்றார்கள். (
நூல்:திர்மிதி) வஞ்சப் புகழ்ச்சியாலோ, அல்லது அளவிற்கு மீறிய புகழ்ச்சியாலோ ஒருவன் தலைகனம் என்னும் அகம்பாவத்தில் வீழ்ந்து அன்னியரை அற்பமாய் எண்ணுகின்ற அகந்தையிலிருந்து காப்பது வெட்கம் என்ற பண்பு அல்லவா? 'வெட்கம் கொள்வது அனைத்திற்கும் நல்லதே'. (நூல்: ரியாலுஸ் ஸாலிஹீன்) அண்ணல் நபிகளார் அதிக அளவில் வெட்கம் என்ற பண்பை பெற்றிருந்தார்கள் என்பது அவர்கள் சரிதையைப் படித்தவர்களுக்குத் தெரியும். எனவே வெட்கம் வியாபித்திருக்கிற வரை தான் உலகில் விபரீதங்கள் கட்டுக்குள் இருக்கும். இல்லை என்றால், விளைவுகள் அபாயகரமானது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
Leave A Comment