• Login / Register
  • செய்திகள்

    கர்நாடக, ஒன்றிய, திமுக அரசுகளுக்கு எதிராக தஞ்சையில் நாதக கண்டன ஆர்ப்பாட்டம்!

    காவிரி நதி நீர் சிக்கல் உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து கர்நாடக, இந்திய ஒன்றிய மற்றும் திமுக அரசுகளுக்கு எதிராக நாளை மறுதினம் தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இது தொடர்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கையில்,

    காவிரி நதிநீர் சிக்கலில் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் கர்நாடக அரசு, துணைபோகும் இந்திய ஒன்றிய அரசு, கையாலாகாத தமிழ்நாடு அரசு ஆகியவற்றை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வுக்கு காரணமான திமுக அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த சோழமண்டலம் சார்பாக தஞ்சாவூரில் வரும் 24-07-2024 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

    தஞ்சாவூர் (ஜுபிடர் திரையரங்கம் அருகில்) நாளை மறுதினம் புதன்கிழமை மாலை 04 மணியளவில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தமிழ்த்தேசியத் தத்துவப் பேராசான் பெ.மணியரசன் கண்டனப் பேருரை நிகழ்த்த உள்ளார்.

    இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    Leave A Comment