மூளைக்கு 5 நிமிட ஓய்வுகொடுத்தால் 50 % செயல்திறன் அதிகரிக்கும் : ஆய்வில் தகவல்
ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருக்கும் நாம் எவ்வளவுதூரம் ஓய்வெடுத்துக்கொள்கிறோம் என்பது கேள்வியே..? ஓய்வு உடலுக்கு புத்துணர்வை தரக்கூடியது. இது தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, பணிச்சுமைகள் இருந்தாலும், நாம் செய்யும் வேலைகளுக்கிடையில், 5 நிமிட இடைவேளை எடுப்பது அடுத்தடுத்து நாம் செய்ய வேண்டிய பணிகளில் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை 50 சதவிகிதத்திற்கு மேல் அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய இந்த பரிசோதனையில், 72 மாணவர்கள் சுயமாக பாடம் கற்பித்தல் மற்றும் இரண்டு கடினமான மனக்கணிதம் ஆகிய பிரிவுகளில் தேர்வு எழுதினர். ஆய்வின் ஒரு பகுதியாக, சில மாணவர்களுக்கு 5 நிமிட இடைவேளை அனுமதிக்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் எந்த இடைவேளையும் இன்றி தேர்வில் கவனம் செலுத்தினர்.
5 நிமிட இடைவெளி அனுமதிக்கப்பட்ட மாணவர்கள், ஓய்வெடுக்காமல் இயங்கியவர்களை விட சராசரியாக 57% அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஓய்வெடுத்த மாணவர்களிலேயே கூட ஒரு சிலர் எந்த கட்டமைப்பும் இல்லாதவாறு இடைவேளையை செலவிட்டனர்.
வேறு சிலர், நிதானமான இயற்கை வீடியோவைப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனாலும், இரு குழுக்களும், 'ஓய்வின்றி உழைத்த மாணவர்கள்' குழுவை விட சிறப்பாக செயல்பட்டிருக்கிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கல்வி உளவியல் இணைப்பேராசிரியர் பால் ஜின்ஸ் (Paul Ginns) இது குறித்து கூறியிருப்பதாவது:- நாம் செய்யும் செயலில் நம் கவனத்தை மீட்டெடுக்கும் இதுபோன்ற மூளைக்கு ஓய்வு வழிமுறைகள் மூலம் நாம் பெறும் 'கணிசமான' மேம்பாட்டை நாம் அலுவலகச் சூழலிலும் கொண்டு வர முடியும். இந்த ஆய்வு பல்கலைக்கழக மாணவர்களிடம் மட்டுமே நடத்தப்பட்டிருந்தாலும், இந்த முடிவுகள் இளைஞர்களுக்கும் வயதானவர்களுக்கும் கூட பொருந்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஓய்வெடுப்பது என்பது அறிவாற்றல் செயல்பாடு மட்டுமல்ல; உணர்ச்சிகளின் 'பேட்டரிகளை' ரீசார்ஜ் செய்வதும் ஆகும். இது குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் அறிவுரை. இது அனைவரும் அணுகக்கூடிய எளிதான உற்பத்தித்திறன் 'மாற்றுவழி' ஆகும். நம் கவனத்தை முழுவதும் ஈர்க்கும் ஒவ்வொரு 25 நிமிட வேலைக்கு பிறகும் ஒரு 5 நிமிட இடைவெளி தேவை என பரிந்துரைக்கும் "பொமோடோரோ டெக்னிக்" (Pomodoro Technique) எனும் செயல்திறன் மேம்படுத்தும் சித்தாந்தத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த ஆய்வறிக்கை அமைந்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave A Comment