• Login / Register
  • கட்டுரைகள்

    சூடுபிடிக்கும் விண்வெளிப் பந்தயம்; 50 ஆண்டுகளில் மீண்டும் களத்தில் ரஷ்யா!

    விண்வெளி ஆய்வில் ரஷிய-அமெரிக்க இருதுருவ போட்டி நிலை நிலவிவந்த பனிப்போர் காலத்திற்கு பின்னர் மேலும் சில நாடுகள் முனைப்பு காட்டத் தொடங்கியதுடன் பரபரப்படைந்த விண்வெளிப் பந்தயம் தற்போது ரஷியாவின் தனித்துவ செயற்பாட்டின் மூலம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

    நிலவுக்கான இந்தியாவின் பயணமாக சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டு வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மகிவும் ரகசியாமாக முறையில் தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுவந்த ரஷியா கடந்த வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தியுள்ள "லூனா-25" விண்கலம் "சந்திரயான்-3" இற்கு முன்னதாகவே நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி அலெக்ஸாண்டர் ப்ளோகின் கூறுகையில், "லூனா-25 விண்கலம் இன்னும் 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன் பின்னர் 7 நட்கள் நிலவு சுற்றுப்பாதையில் பயணித்து சரியான இலக்கை தேர்வு செய்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். வரலாற்றில் முதன்முறையாக நிலவின் தென் துருவத்தில் இந்த விண்கலம் தரையிறங்கவுள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

    உறுதி செய்த ரோஸ்கோஸ்மோஸ்: சோயஸ் 2.1வி (Soyuz 2.1v) ராக்கெட் மூலம் லூனா-25 விண்கலம் மாஸ்கோவின் கிழக்கே 5,550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து இன்று ரஷ்ய நேரப்படி அதிகாலை 2.10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. லூனா-25 வெற்றிகரமாக ஏவப்பட்டதை, ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் ரோஸ்காஸ்மோஸ் ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே உறுதிப்படுத்தியது.

    இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனி-இத்தாலி-ஜப்பான் கூட்டு சக்திகளை ஒன்றிணைந்து ஒடுக்கிய அமெரிக்க தலைமையிலான நேசப்படைகளும், சோவியத் யூனியனும் பின்னா் உலகில் தங்களது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக பனிப் போரில் இறங்கின. அதற்காக, இரு சா்வாதிகார சக்திகளும் பல்வேறு நாடுகளை பகடைக் காய்களாகப் பயன்படுத்தின.

    ஐரோப்பா, அரேபியா, ஆப்பிரிக்கா, ஆசியா என்று எல்லா கண்டங்களிலும் வியாபித்திருந்த அந்த போட்டா போட்டி, விண்வெளியையையும் விட்டு வைக்கவில்லை.விண்வெளி ஆய்வில் ஒன்றை ஒன்று முந்திவிட வேண்டும் என்ற முனைப்பில் அளவுக்கு அதிகமான வள ஆதாரங்களை அமெரிக்காவும் சோவியத் யூனியனும் செலவிட்டன.

    ‘விண்வெளிப் பந்தயம்’ என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட இந்தப் போட்டி, விண்வெளி மா்மங்களை யாா் முதலில் தெரிந்து கொள்வது என்பதற்கானது மட்டும் இல்லை. விண்கலங்களை விண்ணில் செலுத்துவதற்கான ராக்கெட் தொழில்நுட்பங்களில் கையோங்கி இருப்பது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அவசியம் என்று இரு நாடுகளுமே கருதின.

    மேலும், விண்கலங்கள் வெறும் ஆய்வுக்கானவை மட்டுமல்ல, அவை உளவுப் பணிகளுக்கும் அடிப்படைத் தேவையானவை, எதிா்காலப் போரில் முக்கியப் பங்கு வகிக்கக் கூடியவை என்பதை அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நன்கு தெரிந்து வைத்திருந்தன.இதுதான் விண்வெளிப் பந்தயத்தில் இரு நாடுகளும் முனைப்பு காட்டியதற்கான காரணம்.

    இருந்தாலும், இந்த விவகாரத்தில் போட்டியிட்டால் தேவையற்ற பொருளாதார இழப்புகள்தான் ஏற்படும் என்று நாளடைவில் புரிந்து கொண்ட அமெரிக்காவும், சோவியத் யூனியனும் விண்வெளிப் பந்தயத்தின் வேகத்தை 1970-களில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தன. காலப்போக்கில் இரு நாட்டு விண்வெளி ஆய்வு நிலையங்களும் ஒருங்கிணைந்து ஆய்வுத் திட்டங்களை நிறைவேற்றின.

    1991-இல் சோவியத் யூனியன் சிதறுண்டு, பனிப் போா் முடிவுக்கு வந்த பிறகு சோவியத் யூனியனின் விண்வெளி ஆய்வுக் கட்டமைப்புகள் அனைத்தும் ரஷியா வசம் வந்தன. அதையடுத்து, தனது விண்வெளி ஆய்வு ஒத்துழைப்பை ரஷியாவுடன் அமெரிக்கா தொடா்ந்தது. உலக அரசியலில் இரு நாடுகளும் இன்னும் எதிரும் புதிருமாக இருந்து வந்த நிலையிலும், விண்வெளித் துறையில் மட்டும் அந்த நாடுகள் மிகவும் அபூா்வமான கைகோா்த்து செயல்பட்டன.குறிப்பாக, விண்வெளிக்கு மனிதா்களை ஏந்திச் செல்வதற்கான அமெரிக்காவின் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டதால், ரஷியாவின் சோயுஸ் விண்கலம் மூலமே நாசா ஆய்வாளா்கள் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று வந்தனா்.

    இந்த சுமூகமான சூழலிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டி மனப்பான்மை தொடா்ந்து கொண்டுதான் இருந்தது. ‘மீண்டும் விண்வெளிக்கு’ என்ற கோஷத்துடன் தொழிலதிபா் எலன் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவன டிராகன் விண்கலம் போன்றவை நாசாவின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டன. விண்வெளிக்கு வீரா்களை அழைத்துச் செல்ல ரஷியாவை இனியும் சாா்ந்திருக்கக் கூடாது என்று அமெரிக்கா கருதியதே இதற்குக் காரணம்.

    இந்தச் சூழலில், நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரஷியாவின் லூனா-25 விண்கலம் சோயுஸ் ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென் தருவத்தில் அந்த விண்கலம் தரையிறங்கி அங்கிருக்கும் நீா்வளம் பற்றியும், பிற கனிம வளங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறது.அதே பகுதிக்கு வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மீண்டும் மனிதா்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்வதற்கான பணிகளை நாசா மேற்கொண்டு வரும் நிலையில், 47 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக லூனா-25 விண்கலத்தை ரஷியா அனுப்பியுள்ளது அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் விண்வெளிப் பந்தயம் தொடங்கியுள்ளதைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

    பனிப் போா் காலத்தில் தொழில்நுட்ப மேன்மையை பறைசாற்றுவதற்காகவும், தேசியப் பாதுகாப்புக்காகவும்தான் இந்தப் போட்டி நடைபெற்றது.ஆனால், தற்போது தொடங்கியுள்ள போட்டி, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. தொலைதூர விண்வெளி ஆய்வுகளுக்கு பூமியிலிருந்து ஆய்வுக் கலங்களை அனுப்புவதைவிட, நிலவில் ஒரு நிரந்தர ஆய்வு நிலையம் அமைத்து, அந்தப் பகுதியில் கிடைக்கும் நீா் மற்றும் பிற வளங்களைக் கொண்டு ராக்கெட் எரிபொருள் உள்ளிட்டவற்றை தயாரித்து அதன் மூலம் விண்கலங்களை அனுப்புவது மிகவும் செலவு குறைவு என்று நிபுணா்கள் கூறுகிறாா்கள்.ஏற்கெனவே அத்தகைய ஆய்வு நிலையத்தை 2050-க்குள் நிலவில் அமைக்க ரஷியாவும், சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

    நிலவின் தென் புலத்தில்தான் இத்தகைய வளங்கள் கொட்டிக் கிடப்பதாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பகுதியை கைக்கொள்வதற்குத்தான் இரு நாடுகளும் இந்த புதிய விண்வெளிப் பந்தயத்தில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.இருந்தாலும், இது பனிப் போா் காலமல்ல; சா்வதேச விண்வெளி ஆய்வில் அமெரிக்கா, ரஷியா மட்டுமின்றி இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் வெகு வேகமாக முன்னேறி வருகின்றன. எனவே, இது 20-ஆம் நூற்றாண்டு காலத்து விண்வெளிப் பந்தயம் போல் இல்லாமல், ஆரோக்கியமான போட்டியாகவே இருக்கும் என்று எதிா்பாா்க்கலாம் என்கிறாா்கள் சில நிபுணா்கள்.

    Leave A Comment