வெட்டிச் சாய்க்கப்படும் தென்னை மரங்கள்: தேனியில் விவசாயிகளின் நிலை
தேனி மாவட்டத்தில் தென்னை மரங்கள் அதிகளவில் வெட்டி அளிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விலை வீழ்ச்சி, நோய் தாக்குதல், கூலி அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் இவ்வாறு தென்னை மரங்களை வெட்டி அழித்து மாற்றுப் பயிருக்கு மாறி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் கோம்பை, தேவாரம், கடமலைக்குண்டு, உத்தமபாளையம், கம்பம், பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 55 ஆயிரத்து 575 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது.
கன்று நட்டு 7-வது ஆண்டில் இருந்து காய்ப்புத் தொடங்கும். ஒரு பாளைக்கு 10 காய்கள் வரை காய்க்கும். சுமார் 80 ஆண்டுகளுக்கு மேல் வரை தென்னைகள் பலன் தரும். பராமரிப்புக் குறைவு என்பதால் பலரும் இந்த விவசாயத்தில் ஆர்வம் காட்டினர். இங்கு விளையும் காய்கள் காங்கயம், திருச்சி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. உறித்த காய்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது. அதன்பின் இதன் விலை படிப்படியாகக் குறைந்து ரூ.18 வரை வந்துவிட்டது.
இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது வாடல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தென்னையைத் தாக்குகின்றன. மேலும் காய் பறிப்புக் கூலி, உழவுக் கூலி, வண்டி வாடகை வெகுவாக அதிகரித்துள்ளதால் தென்னையால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் தேனி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் பலரும் தென்னந்தோப்புகளை வெட்டி அழித்து விட்டு மாற்றுப் பயிருக்கு மாறி வருகின்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 36 கோடி தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. விலை குறையும்போது கொப்பரையாக மதிப்புக் கூட்டி விலைக்கு வாங்குகிறோம். கடந்த ஆண்டு 100 டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.108.60-க்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது, என்றனர்.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க தேனி மாவட்டத் தலைவர் அம்சராஜ் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாகவே காய் விலை வெகுவாக குறைந்து விட்டது. ஆயுதபூஜை நேரத்தில் கிலோ ரூ.20 வரை விலை கிடைத்தது. ஒரு மரத்தில் இருந்து காய் பறிக்க ரூ.25 கூலி கொடுக்கிறோம். பறிக்கும் தேங்காய்களை தோப்பில் இருந்து கொண்டு செல்ல குறைந்தது ரூ.850 வாடகை கொடுக்க வேண்டி உள்ளது. தொழிலாளிகள் கூலி ரூ.350 ஆக உயர்ந்துவிட்டது. உரம், மருந்து, உழவு போன்றவற்றில் பல மடங்கு விலை அதிகரித்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இதன் சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது. சிறப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தி தென்னை விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும், என்றார்.
நன்றி - இந்து தமிழ்
Leave A Comment