• Login / Register
  • செய்திகள்

    ஆட்சி அமைக்க தீவிரம்; கிங் மேக்கர்களுக்கு வலைவீச்சு - இந்தியா கூட்டணியின் பேரம் படியுமா?

    இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் நிச்சயமற்ற நிலையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் முயற்சியில் தீவிரம்காட்டி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் புதிய ஆட்சியை தீர்மானிக்கும் கிங் மேக்கர்களாக உருவெடுத்துள்ள நிலையில் அவர்களை நோக்கி இந்தியா கூட்டணி பேச்சுகளை தீவிரப்படுத்தியுள்ளமை அரசியல் வட்டாரங்களை பரபரபாக்கியுள்ளது.

    கலைந்தது மோடி-அமித்ஷா கனவு... கூட்டணியே கதி....

    எந்த ஒரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன.

    கூட்டணி ஆட்சி மூலமே புதிய ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை பாஜகாவிற்கு பெருத்த ஏமாற்றமான ஒன்றாக அமைந்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பாஜக கட்சி தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று ஆணித்தரமாக கூறிவந்திருந்தனர்.

    ஆனால் அவர்களது கூற்றுக்கு நேர்மாறாகவே மக்களின் முடிவுகள் அமைந்திருப்பது தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளது.

    தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

    இந்தியா கூட்டணி 230 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று வருகிறது.

    ஆட்சியமைக்க இந்தியா கூட்டணி தீவிரம்...

    வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிவடையும்போது, இந்தியா கூட்டணி 240 தொகுதிகளை தாண்டினால், ஆட்சி அமைக்க முயற்சி செய்ய வாய்ப்புள்ளது.

    குறிப்பாக, தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 14 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.

    இந்த இருவரையும் தங்கள் பக்கம் இழுத்துவிட்டால், பாஜகவுக்கு சிக்கல் ஏற்படும். அதை கருத்தில் கொண்டே, இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதாவது, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில், இந்தியா கூட்டணி கணிசமான இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கியது.

    அப்போது பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலை வந்தபோதே, பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    நிதிசுக்கு துணை பிரதமர் பதவி...

    குறிப்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்தியா கூட்டணிக்கு வந்தால், துணை பிரதமர் பதவி வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததாகவும் தெரிகிறது. ஆனாலும், தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியதுபோலவே, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதில்லை என்றும், கூட்டணி தொடரும் என்றும் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    இருந்தாலும், அவர் திடீர் திடீரென முடிவுகளை மாற்றக் கூடியவர் என்பதால், எதுவும் நடக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து...

    மற்றொரு புறம் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதலமைச்சராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த சில நிமிடங்களில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    எனவே, அவரையும் இந்தியா கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. நிதிஷ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய சரத்பவார்தான், சந்திரபாபு நாயுடுவிடமும் பேசி வருவதாக கூறப்படுகிறது.

    ஆனால், அவரும் இதுவரை எந்த பதிலையும் சொல்லவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அப்போது, சந்திரபாபு நாயுடுவின் நீண்டகால கோரிக்கையான ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும் என இந்தியா கூட்டணி வாக்குறுதி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    கிங் மேக்கர்களாகும் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு

    தற்போது, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் கிங் மேக்கர்களாக உருவெடுத்துள்ளனர்.

    இதை கவனத்தில் கொண்டுள்ள பாஜகவும் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு சில வாக்குறுதிகளை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

    இருப்பினும், தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்தபிறகு, அரசியல் களத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

    Leave A Comment