• Login / Register
 • ராசி பலன்கள்

  குரோதி புத்தாண்டு பொதுப் பலன்கள்!

  சித்திரை 01 ஆம் நாள் (14.04.2024) பிறக்கும் குரோதி புத்தாண்டு உலகில் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தும் ஆண்டாகவும் மக்களின் துயரங்கள் அதிகரிக்கும் வகையில் அமைய இருப்பதனால் எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இந்த குரோதி புத்தாண்டில் உலகத் தலைவர்களது உடல் நலன் தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும் எனவும், புதுவித நோய்கள் உருவாகும் எனவும், இயற்கை பேரழிவுகள் ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

  குரோதி வருடப் பிறப்பு...

  நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த சனிக்கிழமை இரவு 8.10 மணிக்கு 13-04-2024 சுக்ல பட்சத்தில் சஷ்டி திதி, மிருகசீரிஷம் 4 ஆம் பாதத்தில் மிதுன ராசியில், விருச்சிக லக்னத்திலும், நவாம்சத்தில் கடக லக்னம், துலா ராசியிலும் சோபனம் நாமயோகம், கவுலவம் நாமகரணத்தில் சனி ஹோரையிலும், செவ்வாய் மகா தசையில் சுக்கிர புத்தி, புதன் அந்தரத்தில் இந்த தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.

  14.042024 முதல் 13.04.2025 வரையான குரோதி புத்தாண்டு பொதுப் பலன்கள்

  எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஆண்டு

  குரோதி ஆண்டு சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஆண்டாகும். இயற்கை சீற்றம், கள்வர் பயம், எதிரிகளால் அதிக தொல்லை இருக்கக் கூடும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இவற்றைத் தவிர்க்கலாம்.

  மழைப் பொழிவு குறைவடையும்

  தேவையான நேரத்தில் மழைப் பொழிவு குறைவாக இருக்கும். காய்கறி பற்றாக்குறை காணப்படலாம், பயிர்களும் சுமாரான விளைச்சலைத் தரும் என்று இந்த வெண்பாவில் கூறப்பட்டுள்ளது.

  இவ்வருஷத்துக்கு விந்திய மலையில் தென்மேற்கு திசையில் வாருண மேகம் உற்பத்தியாகிறது. பெய்யும் மழையில் 50 சதவீதம் கடலிலும், 30 சதவீதம் மலையிலும், 20 சதவீதம் பூமியிலும் பெய்யும்.

  உலகத் தலைவர்களுக்கு ஆபாத்து

  குரோதி தமிழ் ஆண்டில் உலகில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உடல் நலனிலும், பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

  இயற்கை பேரழிவு

  எரிமலைச் சீற்றம், கடல் தொந்தளிப்பு, மலைப் பிரதேசங்களில் மண் சரிவு, தீ விபத்துகள், ரசாயனக் கழிவுகளால் அபாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாகிறது.

  மக்கள் புரட்சி

  அரசியல் கட்சியினருக்குள் குழப்பங்கள் ஏற்படும். மக்களிடையே ஒற்றுமை ஏற்படும். நாட்டில் விலைவாசி உயரும். காய் கனிகள் விலை உயரும்.

  புதுவித நோய்கள்

  புதுவித நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதற்கு தகுந்தவாறு உரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். எல்லையில் போர் ஏற்படலாம்.

  உலகை வியப்பில் ஆழ்த்தும் இந்தியாவின் வளர்ச்சி

  இந்தியா பல்வேறு வகையில் வளர்ச்சியை அடையும். இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளை உலகமே வியந்து பார்க்கும். நல்ல பலன் அளிக்கக்கூடிய வகையில் அவை இருப்பதால், நல்ல பாராட்டைப் பெறும்.

  கரும்பு, மஞ்சள் விளைச்சல் அதிகரிக்கும். சிவப்புநிற பொருட்கள் விளைச்சல் அதிகமாகும். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகிறது. குற்றச் செயல்களையும், தீராத நோய்களையும் களையும் பொறுப்பில் அவர்கள் உள்ளனர்.

  வாழ்க்கை சீராக அமைய குடும்ப பந்தம் அவசியம். குடும்பத்தில் ஒற்றுமை மிகவும் முக்கியம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, மனம் விட்டுப் பேசி அன்புடன் இருக்க வேண்டும். வீண் சந்தேகங்கள், வீண் விவாதங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பெற்றோர், பெரியவர்களை மதித்தல், மகான்களை வணங்குதல், குலதெய்வ வழிபாடு, பழைய கோயில் புதுப்பிப்பு, ஏழை, எளியோருக்கு உதவுதல் ஆகியவற்றை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

  தங்கம், வெள்ளி, உலோகங்களின் விலை சில மாதங்களுக்கு குறையும். ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. முதலீட்டாளர்கள் அதிக லாபம் பெறுவார்கள், விவசாய நிலங்கள் வீடு கட்ட விற்கப்படும் அபாயம் உள்ளது. உணவு சாகுபடியில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட முன்வர வேண்டும்.

  ஆக மொத்தம் இந்த ஆண்டு, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஆண்டாகவும், பல வித அனுபவங்களைத் தரக் கூடிய ஆண்டாகவும் அமைகிறது.

  லோகா சமஸ்து சுகினோ பவந்து (இந்த உலகில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்) என்று அடிக்கடி சொல்லி வரவும். இந்த வாசகம் நேர்மறை நோக்கங்களை, தன்னலமற்ற தன்மையை ஊக்குவிக்கிறது. உள் அமைதி, ஒற்றுமையை வளர்க்கிறது. மன அழுத்தம், பதற்றத்தை போக்குகிறது.

  Leave A Comment