• Login / Register
  • மேலும்

    தொற்றா நோய்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெரும் சுமை - Dr. தயாளினி மகேந்திரன்!

    நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு போன்ற தொற்றா நோய்கள் எமது சமூகத்தில் மிக தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் அவை வீட்டிற்கும் நாட்டிற்கும் பெரும் சுமையாகவே காணப்படுவதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி திருமதி தயாளினி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    தொற்றா நோய்கள் தொடர்பிலும் சைக்கிள் ஓட்ட பயிற்சியை ஊக்குவிக்கும் வகையிலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்களினால் இணைந்து முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட போட்டி நிகழ்வினை தலைமைதாங்கி தொங்கி வைத்த அவர் நிகழ்வ தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

    நீரிழிவு, இரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு மற்றும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எதிர்கொள்ளும் உடற்பருமன் உள்ளிட்ட தொற்றா நோய் பாதிப்புகள் எமது சமூகத்தில் மிக தீவிரமாக அதிகரித்து வரும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையானது வீட்டிற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் பெரும் சுமையாகவே காணப்படுகிற்து.

    இவ்வாறான தொற்றா நோய்களினால் பாதிக்கப்படுபவர்களின் சிகிச்சைக்காக பெரும் தொகை நிதியை ஒதுக்கவேண்டிய சந்தரப்பம் ஏற்படுகின்றது. அதுமாத்திரமல்லாது அவர்களின் வாழ்வின் தரம் மற்றும் நீடிப்பு என்பன மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.

    தொற்றா நோய்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு எம்மிடையே ஏற்படுகின்றது? என்பது தொடர்பில் எமது சமூகத்திற்கு எடுத்துக் கூறுவது எமது கடமைகளில் ஒன்றாகும். அந்தவகையில், உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, உடற்பயிற்சி அற்ற தன்மை போன்றவையே தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக காணப்படுகின்றன.

    சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையானோருக்கு ரோல்ஸ், பற்றிஸ் உள்ளிட்ட துரித உணவுகளை அதிகமாக வழங்கி வரும் நிலை காணப்படுகிறது. அதுபோன்று குளிர்பானங்கள் அதகிமாக அருந்தும் பழக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. குளிர்பானங்களில் அதிக கலோரி மற்றும் சீனி அதிகமாக காணப்படுவதனாள் எமது உடல் பருமன் அதிகரிப்பிற்கு இது மிக முக்கிய காரணமாக காணப்படுகின்றது.

    சாதாரண பெண் ஒருவருக்கு நாள் ஒன்றிற்கு ஐந்து தேக்கரண்டி அளவு சீனியும் ஆண் ஒருவருக்கு ஒன்பது தேக்கரண்டி அளவு சீனியும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு உப்பே பயன்படுத்த வேண்டும். ஆனால் நாம் குறித்த அளவுகளை விட மிக அதிகமாகவே இவற்றை நாளாந்தம் எமது உணவுகளில் சேர்த்து எடுத்து வருகின்றோம். இதுவே தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது.

    தற்காலத்தில் உடற்பயிற்சி அற்ற தன்மை அதிகரித்து வருகிறது. எல்லோருமே வேலைக்கு செல்லும் வாழ்க்கை முறையில் எதுவிதமான உடற்பயிற்சிகளும் இன்றி இருந்த இடத்தில் இருந்து வேலை செய்துவிட்டு செல்லும் நிலைகாணப்படுகிறது. தினமும் 30 நிமிடங்களாவது நாம் உடற்பயிற்சிக்காக ஒதுக்குவது மிகவும் அவசியமாகும்.

    நாளாந்தம் நாம் வீடுகளில் செய்யும் வேலைகள் எல்லாம் உடற்பயிற்சிக்குள்ளே அடங்கம் என்பதாக நாம் நினைத்துக் கொள்கின்றோம். தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு செய்யும் பயிற்சியே உடற்பயிற்சியாகும். அவ்வாறு தொடர்ச்சியாக செய்யும் உடற்பயிற்சியே எமது உடல் எடையை குறைப்பதற்கும் ஆராக்கியமாக வாழ்விற்கும் கைகொடுக்கும்.

    சில காலத்திற்கு முன்னர் சிறுவயது முதலே எமது அன்றாட வாழ்வில் நடை பயணம் மற்றும் சைக்கிள் பயணம் இன்றியமையாதவையாக இருந்து வந்தது. தற்பொழுது எமது பிரதான போக்குவரத்து சாதனங்களாக மோட்டார் சைக்கிள், கார், வான் போன்றவை மாறிவிட்டது. குறித்த வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்திய நிலையில் திடீரென சைக்கிளை பயன்படுத்துவது மிகவும் சிரமான ஒன்றாகவே இருக்கும் என்ற கருத்து மக்களிடம் காணப்படுகிறது. அதனை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் இந்த வழிப்புணர்வு சைக்கிள் ஓட்டப்போட்டியை நடத்தியிருக்கின்றோம்.

    அதனையும் கடந்து எமது வாழ்வில் சைக்கிள் பயணம் என்பது உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புபட்ட ஒன்றாக விளங்கிவருகின்றது. சிறு வயதில் இருந்தே குறிப்பாக மாணவர்களிடம் நடை பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்ட பயிற்சி என்பவற்றை பழக்கப்படுத்துவது அவசியமாகும்.

    உடற்பயிற்சி அற்ற வாழ்வு எம்மை தொற்றா நோய்களின் தாக்கத்திற்கு உட்படுத்தி எமது வாழ்வின் தரத்தினையும் வாழ்வின் ஆயுட்காலத்தினையும் குறைத்துக் கொண்டே செல்கின்றது. அந்தவகையில் இந்த தொற்றா நோய்கள் எமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் வீட்டிற்கும் பெரும் சுமையாகவே மாறியுள்ளது. என தெரிவித்தார்.

    Leave A Comment