• Login / Register
  • கட்டுரைகள்

    தமிழரசு கட்சி தலைவர் போட்டி; மூடிய அறைக்குள் நடந்தது என்ன?

    இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தேர்வு வரலாற்றில் முதன் முறையாக வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்படும் நிலை உறுதியாகியுள்ள நிலையில் மூடிய அறைக்குள் நடந்த இணக்க பேச்சுவாரத்தையின் மூலம் சுமந்திரன் - சிறீதரன் இடையே ஏற்பட்டிருந்த கள்ளக்கூட்டின் ரகசியம் அம்பலமாகியுள்ளது.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது எதிர்பாராத திடீர் திருப்பமாக சிறீதரன் - சுமந்திரன் இணைந்து செயற்பட்டிருந்தனர். தமிழ் மக்கள் விரோத செயற்பாட்டை வெளிப்படையாகவே முன்னெடுத்து வரும் சுமந்திரனுடன் தீவிர தமிழ்த் தேசியவாதியாக தன்னை காட்டிக்கொள்ளும் சிறீதரன் இணைந்தமை அப்போதே அரசல் புரசலாக பேசுபொருளாக மாறியிருந்தது.

    சுமந்திரனை மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் ஒப்பிட்டு சிறீதரன் பேசிய விடயம் அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் அவர்களின் திடீர் பாசத்தின் பின்னணியில் வெளியே சொல்லப்பட முடியாத காரணங்கள் இருக்கலாம் என கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன்.

    பின்னர் அவ்விடயம் மறக்கப்பட்டதாகி வேறு பல விடயங்கள் முதன்மையாகியிருந்தன. அவ்வாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கான மும்முனைப் போட்டி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

    தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவானது ஏகமனதாகவே இதுவரை காலமும் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது தலைவர் பதவிக்கு சுமந்திரன், சிறீதரன், யோகேஸ்வரன் என மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.

    இவ்வாறு கட்சி தலைவர் பதவிக்கு போட்டி நிலவும் பின்னணியில் கட்சி அணிகளாக பிளவுபடும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளமை தொடர்பில் தமிழ்த் தேசிய அரசியல் சார்ந்து பல தரப்பிலும் கரிசனையுடன் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கடந்த 10ஆம் திகதி கொழும்பில் இரா.சம்பந்தனின் பங்களாவில் நடந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல் செயற்குழு கூட்டத்தில், தலைமை பதவிக்கான போட்டியை தவிர்க்குமாறும், வேட்பாளர்கள் பேசி, தமக்குள் ஒரு முடிவை எட்டுமாறும் அனைவராலும் கோரப்பட்டனர்.

    இதையடுத்து, தாம் பேசி ஒரு முடிவை எடுக்க 1 நாள் அவகாசம் தருமாறு வேட்பாளர்களால் கோரப்பட்டிருந்தது.

    இதை தொடர்ந்து, 11ஆம் திகதி மாதிவெலவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பில் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

    இந்த சந்திப்பின் தொடக்கத்தில், தலைமை பதவிக்கு தான் போட்டியிடப் போவதாகவும், போட்டியிலிருந்து விலகுமாறும் சிறிதரனிடம், எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண்டார்.

    பதிலாக, கட்சியின் தேசிய அமைப்பாளர் அல்லது பிரதி தலைவர் போன்ற ஒரு பதவியை சிறிதரன் ஏற்கலாம் என சுமந்திரன் குறிப்பிட்டார்.

    எம்.ஏ.சுமந்திரனின் இப்பேரத்தை சி.சிறிதரன் உறுதியாக நிராகரித்தார்.

    “நான் தலைமை பதவிக்கு போட்டியிடும் போது அதற்கு ஆதரவாக செயற்படுவேன் என சொல்லியிருந்தீர்கள் அல்லவா. அதை செய்யுங்கள். நீங்கள் போட்டியிருந்து விலகுங்கள்“ என சிறிதரன் தெரிவித்தார்.

    சுமந்திரன் அதை ஏற்கவில்லை. முன்னர் ஒரு சூழ்நிலையில் அதை சொன்னதாகவும், தற்போது வேறு சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து, இணக்கமின்றி கூட்டம் முடிந்தது.

    இவ்வாறு மூடிய அறைக்குள் நடந்த கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து இரகசிய வாக்களிப்பு முறையில் இடம்பெற உள்ள கட்சி தலைவர் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெற உள்ளது.

    இந்நிலையில், மூடிய அறை கலந்துரையாடலில் வெளிவந்துள்ள விடயம் கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்து கள்ளக்கூட்டின் பேரத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

    தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை ஓரம்கட்டி வீழ்த்தி விட்டு தமிழரசு கட்சியின் தலைமை பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கு நோக்கி திட்டமிட்டு செயற்பட்ட சுமந்திரன் பல காய்நகர்த்தல்களை கட்சிக்கு உள்ளும் வெளியேயும் மேற்கொண்டுவந்தார்.

    அதனடிப்படையில் கட்சி தலைவர் பதவி ஆசையை காட்டி சிறீதரனை தனது வலைக்குள் வீழ்த்தி மாவை அணியை பலவீனப்படுத்தியிருந்தமை இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

    “நான் தலைமை பதவிக்கு போட்டியிடும் போது அதற்கு ஆதரவாக செயற்படுவேன் என சொல்லியிருந்தீர்கள் அல்லவா. அதை செய்யுங்கள். நீங்கள் போட்டியிருந்து விலகுங்கள்" என சிறிதரன் தெரிவித்த விடயம் இதனையே உணர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment