ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு எப்படி..? - கட்டாயம் பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர்...?
நிழல் கிரகங்களாக வர்ணிக்கப்படும் ராகு-கேது பெயர்ச்சி கடந்த 08.10.2023 அன்று இடம்பெற்றுள்ளது.
இந்த ராகு-கேது பெயர்ச்சியானது வரும் 24.04.2025 வரையான ஒன்றரை வருடங்கள் நீடித்து பலன்களை வழங்கப்போகின்றது.
கடந்த 08.10.2023 மதியம் 3.36 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து, மீன ராசிக்கு இடம்பெயர்ந்து உள்ளார்.
கேது பகவான் துலாம் ராசியில் இருந்து, கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்து உள்ளார்.
இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது, எந்த ராசிகளுக்கு கட்டாயம் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றிய தகவலையும், 12 ராசிக்காரர்களுக்கும் உண்டான ஜோதிடப் பலன்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
ராகு-கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்
இந்த ராகு-கேது பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக உள்ளது.
இவர்கள் குடும்பத்தில் இதனால் வரை எதிர்கொண்டு வந்த சிக்கலில் இருந்தும், குழப்பத்தில் இருந்தும் வெளி வருவார்கள். தொழில் சம்மந்தப்பட்ட பிரச்சினையிலிருந்து இன்னும் ஒரு சில நாட்களில் படிப்படியாக வெளியில் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
திருமணம் தடையால் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கும் இனி தடைகள் விலகும். நன்மை நடக்கும்.
இந்த ராகு கேது பெயர்ச்சியில் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள் எவை...?
மேஷம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம், இந்த ஏழு ராசிக்காரர்களும் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. அதிலும் குறிப்பாக சிம்மம் கன்னி, கும்பம், மீனம் இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. ராகு கேது பெயர்ச்சி நடந்து முடிந்த பிறகு கோவிலுக்கு சென்று ராகு பகவானையும் கேது பகவானையும் தரிசனம் செய்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து பரிகாரம் செய்து கொள்ளவும்.
நிழல் கிரகங்கள் என்ற சொல்லப்படும் இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலமாக 12 ராசிக்காரர்களும் என்னென்ன பலன்களை பெறப் போகிறார்கள் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் இனி விடிவுகாலம் பிறக்கும். காசு சம்பந்தப்பட்ட பிரச்சனையால் தலைமறைவாக வாழ்ந்தவர்கள் கூட இனிவரும் காலகட்டத்தில் தலை நிமிர்ந்து வாழ்வீர்கள். தன்னம்பிக்கையானது உயர்ந்து, தைரியத்தோடு செயல்பட்டு சொந்த தொழில் முதல், செய்யும் வேலை வரை வெற்றி காண்பீர்கள். உங்களுக்கு இனி வரும் காலம் நல்ல காலம் தான்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி ரொம்பவும் நல்லபடியாக அமைந்திருக்கின்றது. வருமானம் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். சொந்தத் தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்தலாம். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்து செல்லும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நல்ல மாற்றத்தை தான் கொடுக்கப் போகின்றது. இதுநாள் வரை முயற்சிகளில் தோல்வியை மட்டுமே பார்த்த உங்களுக்கு, இனி நீங்கள் செய்யும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் சீக்கிரம் முன்னேற்றம் அடைவீர்கள். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்களை தோற்கடிக்க யாராலும் முடியாது. இனி தைரியமாக எல்லா விஷயத்திலும் முடிவு எடுக்கலாம்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இனிமேல் ஏற்றங்கள் நிறைந்த நாட்களாக தான் அமையும். இதுநாள் வரை இருந்து வந்த சின்ன சின்ன தோல்விகளும் வெற்றியாக மாறும். நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நன்மைகளை பெறப் போகிறீர்கள். சண்டை சச்சரவோடு இருந்து வந்த உறவுகள் கூட இனி சமாதானம் பேச உங்களை தேடி வரும். வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுடைய கனவு நிறைவேறும். தலைக்கு வந்த பிரச்சனை தலைப்பாகையோடு போகும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்திலும் இனிமேல் அவசரப்படக்கூடாது. எதை செய்தாலும் முன்பின் யோசித்து செய்ய வேண்டும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. குடும்ப பிரச்சனையை வேறு ஒருவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. செய்யும் வியாபாரம் தொழில் இவைகளில் அடுத்தவர்களை நம்ப கூடாது. வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை. மறக்காமல் இன்று ராகு கேதுவை தரிசனம் செய்து பரிகாரம் செய்து கொள்ளுங்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியானது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். பொன் பொருள் சேர்கை இருக்கும். சொத்து வாங்கக்கூடிய யோகம் உள்ளது. தடைப்பட்டு வந்த திருமண காரியங்கள் சுகமாக நடந்து முடியும். பிரித்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. வருமானம் அதிகரிக்கும். சொந்த தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியானது நல்ல முன்னேற்றம் தரக்கூடிய பெயர்ச்சியாக தான் அமையும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதை மட்டும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பூர்வீக சொத்து பிரச்சனை சரியாகி உங்கள் கைக்கு சொத்து பத்திரமானது வந்து சேரும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனி வர கூடிய காலகட்டம் முன்னேற்றம் தரக்கூடிய காலமாகத்தான் இருக்கும். சொந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பாராத உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு இருக்கும். மனது ஆன்மீகத்தை தேடி ஓடும். இதுநாள் வரை இருந்த மன அழுத்தங்கள் குறையும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இதுநாள் வரை உங்களை அவமானப்படுத்தியவர்கள் கூட இனி வந்து உங்களுக்கு ஆதரவாக பேசுவார்கள். சமுதாயத்தில் உங்களுடைய அந்தத்தும் மரியாதையும் உயரும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்களை தரப் போகின்றது. செய்யும் தொழிலில், செய்யும் வேலையில் மாற்றம் ஏற்படும். சில பேர் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயரவும் வாய்ப்புகள் உள்ளது. அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது. அவசரப்பட்டால் பிரச்சனை உங்களுக்கு தான். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த பெயிற்சி நல்ல தைரியத்தை கொடுக்கப் போகின்றது. துணிச்சலாக நிறைய விஷயங்களில் மூக்கை நுழைப்பீர்கள். ஆனால் அது அவ்வளவு சரியானது அல்ல. உங்களுக்கு தேவையான விஷயத்தை மட்டும் நீங்கள் கவனம் செலுத்தினால் போதும். குடும்ப வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு எல்லா விஷயத்திலும் அதிக ஈடுபாடு இருக்கும். நல்ல உழைப்பையும் முதலீடாக போடுவீர்கள். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்குமா என்பதில் தான் சிக்கலே.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி சொல்ல கூடிய பாடம் என்ன தெரியுமா. அமைதியாக இருந்தால் தான் உங்களால் சாதிக்க முடியும். இதுநாள் வரை நீங்கள் கோபமாக பேசினால் கூட எதிராளி உங்களுக்காக ஒரு பரிதாபம் பார்ப்பான். ஆனால் இனிமேல் கோபமாக பேசினாள் உங்களுக்கு அது பிரச்சனை. நிறைய நல்ல வாய்ப்புகளை இழக்க உங்கள் வாய் தான் காரணமாக இருக்கும். அமைதியாக பேசினால் அடுத்த ஒன்றரை வருட காலம் பிரச்சனை இல்லாமல் தப்பிக்கலாம். பாத்துக்கோங்க. செலவுகள் அதிகரிக்கும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதில் சிக்கல்கள் இருக்கும். ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் கவனம் தேவை.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நிறைய வரவை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமையை அதிகப்படுத்தும். ஆனால் பணம் சம்பந்தப்பட்ட சிக்கலில் மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். சொந்த தொழிலில் யாரையும் நம்ப கூடாது. புதுசாக தொழில் தொடங்க வேண்டாம். சிலருக்கு வெளிநாட்டுக்கு போகக்கூடிய யோகம் இருக்கிறது. அடுத்து ஒன்றரை வருட காலம் நீங்கள் அடுத்தவர்களை முழுசாக நம்பி எதையும் செய்யாமல் இருந்தால் ஏமாற்றத்திலிருந்து தப்பிக்கலாம்.
Leave A Comment