• Login / Register
 • செய்திகள்

  தனி ஒருவனாக சாதித்த சீமான் - ஆராத்தி எடுத்து வரவேற்ற கயல்விழி!

  இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாளை (19) வெள்ளிக்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பித்து மாலை 06.00 மணி வரை இடம்பெற உள்ளது.

  புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி நாம் தமிழர் கட்சி தனித்து களம்காண்கிறது.

  "அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம்" என்ற முழக்கத்தை முன்வைத்து எளிய மக்களின் அரசியல் புரட்சி பயணத்தை தொடரும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் களம்காண்கின்றனர்.

  ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு இடம்பெற உள்ளதை அடுத்து குறுகிய நாட்களே பிரச்சார நடவடிக்கைக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

  முன்னதாக ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம் தேர்தல் ஆணையத்தினாள் முடக்கப்பட்டு சின்னம் தொடர்பான இழுபறி நிலை காணப்பட்ட நிலையில் சின்னம் இன்றியே 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி தேர்தல் பரப்புரை பயணத்தை சீமான் ஆரம்பித்திருந்தார்.

  அதன் பின்னரே ஒலிவாங்கி (மைக்) சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் சமூகவலைத்தள பாசறையினர் உள்ளிட்ட கட்டமைப்புகளை சேர்ந்தவர்கள் அதிதீவிர பரப்புரை மேற்கொண்டு கடந்தகாலத்தை போன்று ஒலிவாங்கி சின்னத்தையும் பிரபல்யப்படுத்தியிருந்தனர்.

  அதுமாத்திரமல்லாது, பிரித்தானியா பாராளுமன்ற முன்றலிலும் பிரான்ஸ் - பாரீஸ் உள்ளிட்ட உலகின் முக்கிய இடங்களில் ஒலிவாங்கி சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

  டுபாய் - அமீரகத்தில் உள்ள உலகிலேயே உயரமான கட்டிடத்திலும் நாம் தமிழர் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஒளிரவிடப்பட்டு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

  இவை ஒருபக்கம் இருக்க, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சூறாவளி பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தார்.

  21 நாட்களில் 40 தொகுதிகளுக்கும் சுமார் 6000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த சீமான் 100 மணி நேரம் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

  ஓய்வு உறக்கம் இன்றி ஓயாத பரப்புரை பணியில் ஈடுபட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டு சென்னை திரும்பிய சீமானை அவரது மனைவி கயல்விழி ஆராத்தி எடுத்து வரவேற்றிருந்தார்.

  நாம் தமிழர் கட்சியை தாங்கி நிற்கும் சீமான் இந்த தேர்தலிலும் தனி ஒருவனாக அர்ப்பணிப்புடன் அதிதீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளமை அக்கட்சியினரை கடந்து கவனிப்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  நல்லாட்சி என்பது வெறும் சொல்லாட்சியில் மட்டும் தான் இருக்கின்றதே ஒழிய மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், சட்டங்கள் இவை ஏதும் இல்லாது ஒரு கேடுகெட்ட ஆட்சிமுறை ஒரு பணநாயகத்தை மடடும் நம்பி மான்பு மிகு ஜனநாயகத்தை படுகழியில் புதைத்த இந்த கட்சிகள் ஆட்சிகளை அப்புறப்படுத்தி ஒரு நல்ல அரசியலை உருவாக்கி நல்லாட்சியை மலரச் செய்யவேண்டும் என்ற மகத்தான கனவோடு உங்கள் பிள்ளைகள் புறப்பட்டு வந்துள்ளோம்.

  நாங்கள் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சியை தொடங்கியவர்கள் அல்ல. நீண்டகாலம் ஆட்சி அதிகாரத்தை வைத்து அமைச்சர் பெருமக்களின் வாரிசுகளும் அல்ல.

  ஈழ தாயகத்தில் எம்முயிர் சொந்தங்கள் லட்சக்கணக்காக கொன்று குவிக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்ட பிணக்குவியல்களுக்கு இடையே நாம் பிரசவமானோம்.

  நாங்கள் கண்ணீரிலும் இரத்தத்திலும் கருக்கொண்டு உருவானவர்கள். தாலாட்டு கேட்டு வளர்ந்த பிள்ளைகள் அல்ல நாங்கள். எம் இனச் சொந்தங்கள் கத்திய கதறல்களிலும் ஒப்பாரி ஓலங்களையும் கேட்டே வளர்ந்தவர்கள் நாங்கள்.

  அதனால் தான் வலி தோய்ந்த இதயத்தோடு எங்கள் மொழிகளை எடுத்து வைக்கின்றோம்.

  செயல் அரசியல் வழி தொடரும் எமது அரசியல் பயணத்திற்கான உங்கள் அங்கீகரமாகத்தான் கடந்த தேர்தலில் 32 இலட்சம் வாக்குகளை வழங்கி மூன்றாவது பெரிய கட்சியாக ஆக்கிநீர்கள்.

  அதே நம்பிக்கை.. அதே உறுதி.. அதே கோட்பாடு.. அதே கொள்கை.. தத்துவத் தடுமாற்றம் இல்லாது தளர்ச்சி இன்றி முயற்சி முயற்சி என்று இன்று இந்த தேர்தல் களத்திலும் தனித்தே நிற்கின்றோம்.

  எந்த முயற்சியையும் தொடக்கத்தில் வீண் முயற்சி என்பார்கள். வென்றுவிட்டால் விடா முயற்சி என்பார்கள் என்ற புரட்சி மொழி வழியே தொடரும் எமது அரசியல் பயணத்தை உங்கள் பிள்ளைகள் நாங்கள் தொடர்ந்து வருகின்றோம்.

  எங்கள் முயற்சிகளையும் அவ்வாறே வீண் முயற்சி என்கிறார். ஜூன் 04 ஆம் திகதி அதனை விடா முயற்சி என்று சொல்லும் நிலையை எம் மக்கள் ஏற்படுத்துவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இந்த தேர்தல் களத்தில் நிற்கின்றோம்.

  நாங்கள் தோற்றுப் போகவில்லை. வெற்றியை துரத்திக் கொண்டிருக்கின்றோம். ஒரு நாள் நிச்சயம் அது எங்கள் கைகளில் சிக்கும்.

  நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் முடிவுகள் இந்திய - திராவிட அரசியல் ஆதிக்கத்துக்கு முடிவுரையாக அமையும் என்ற சீமானின் நம்பிக்கை மெய்ப்படுமா என்ற கேள்விக்கு தமிழக மக்கள் வழங்கும் பதிலை அறிய நாம் தமிழர் உறவுகள் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் ஜூன் 04 ஆம் திகதியை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  Leave A Comment