• Login / Register
 • ஆன்மிகம்

  ஓய்வு என்பதன் பொருள்: இஸ்லாம் என்ன சொல்கிறது..?

  உலகின் ஒவ்வொரு மதமும் எதோ ஒரு வகையில் வாழ்வில் நலனளிக்கக்கூடிய ஏராளமான விடையங்களை பற்றி சொல்லியிருக்கும். 

  ஒய்வு என்பது வாழ்வில் இன்றியமையாத ஒன்று அதனை சரியான முறையில் எடுத்துக்கொள்கிறோமா? என்ற கேள்வி இப்போதெல்லாம் அதிகமாகவே இருக்கிறது. ஒய்வு என்பதன் முழுமையான அர்த்தம் என்ன என்பது பற்றி இஸ்லாமிய மதம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். 

  ஓய்வு என்பதன் பொருள் 'தொடர்ச்சியான, ஒரு செயலில் இருந்து விடுபடுவது' என்பதாகும். இந்த விடுபடுதல் என்பது தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இருக்கலாம்.

  நாம் ஈடுபடும் செயலில் இருந்து சிறிது நேரம் நம்மை விடுவித்து களைப்பாறுதல். நமது அன்றாட பணியின் வேலைப்பளு தாக்கத்தில் இருந்து தம்மைத் தாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள இளைப்பாறுதல். ஒருநாள் தொடர் வேலையில் மத்தியப்பகுதியில் சற்றுநேரம் அவகாசம் எடுத்துக் கொண்டு தளர்வை போக்க ஓய்வு பெறுதல். நோயில் இருந்து உடல் விடுபட மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமுறை ஓய்வு, இவையாவும் தற்காலிக ஓய்வுகளாகும்.

  இன்னும், சில ஓய்வுகள் நிரந்தரமானதாக அமைந்துவிடுகிறது. அது, பணிநிறைவு எனும் ஓய்வு. அடுத்தது, வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விடுபட்டு, இயற்கை எய்தி இறைவனடி நிழலில் இளைப்பாறுதலாகும்.

  'நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் 'இவர் ஓய்வு பெற்றவராவார்; அல்லது இவர் பிறருக்கு ஓய்வு அளித்தவராவார்' என்றார்கள்.

  மக்கள் 'இறைத்தூர் அவர்களே, ஓய்வு பெற்றவர், அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?' என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இறைநம்பிக்கை கொண்ட அடியார் இறக்கும்போது இவ்வுலகத்தின் துன்பத்தில் இருந்தும், தொல்லையில் இருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார்.

  பாவியான அடியான் இறக்கும்போது அவனின் தொல்லைகளிடம் இருந்து மற்ற அடியார்கள் (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி), நூல்: புகாரி)

  'ஒருமுறை, ஒரு பிரேதத்தை கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றி மக்கள் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உறுதியாகி விட்டது' என்றார்கள். மற்றொருமுறை வேறொரு பிரேதத்தை கடந்து சென்றபோது, மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசினார்கள். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், 'உறுதியாகி விட்டது' என்றார்கள்.

  உடனே உமர் (ரலி), 'எது உறுதியாகி விட்டது?' என்று கேட்டதும், நபி (ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறி புகழ்ந்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. மற்றவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள், எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் இறைவனின் சாட்சிகளாவீர்கள்' என்று கூறினார்கள்.

  (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி) மக்களிடம் நல்லவிதமாக நடந்து, நல்லதை செய்து, இவர் நல்லவர் என்று மக்களிடம் நற்பெயர் பெற்றால் போதும், அவருக்கு சொர்க்கம் உறுதி. மக்களிடம் மோசமாக நடந்து, மோசடி செய்து, கெட்டபெயர் பெற்று, கெட்டவன் என்று மக்கள் இகழ்ந்தாலே போதும், அவருக்கு நரகம் உறுதி.

  ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அநியாயத்திலும், அட்டூழியத்திலும், கொடுமைப்படுத்துவதிலும் பிரபலமாகத் திகழ்ந்தான். அப்துல்லாஹ் பின் சுபைர், ஸயீத் பின் சுபைர் போன்றோரை ஈவு இரக்கமின்றி கொன்றான். இறுதியில் அவன் நோய்வாய்ப்பட்டான். நோயின் வேதனை தாங்கமுடியாமல் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் உதவியும், நிவாரணமும் வேண்டினான். அதற்கு ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் 'நல்லவர்களுக்கு நீ கெடுதல் செய்யாதே, என நான் உன்னைத் தடுத்தேன்.

  இப்போது நீ கடும் சிரமத்தில் மாட்டிக்கொண்டாய்' என்றார். அதற்கு ஹஜ்ஜாஜ் பின் யூசுப் 'ஹஸனே! என்னிடமிருந்து கடும் சிரமம் நீங்கிவிட இறைவனிடம் பிரார்த்திக்கும்படி நான் உம்மை வேண்டிக் கொள்ளவில்லை. மாறாக, எனது உயிர் சீக்கிரமாக கைப்பற்றப்பட வேண்டும் எனவும், எனக்கு ஏற்படும் வேதனை நீடிக்கக்கூடாது எனவும் தான் நான் உம்மை வேண்டும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

  ஹஜ்ஜாஜ் இறந்தபோது, அந்த செய்தியை அறிந்த மக்கள் வீதிக்கு வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மஃமூன் இறந்தபோது இமாம் அஹ்மது (ரஹ்) அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். தன்னை நபி என்று வாதிட்ட பொய்யன் முஸைலமா கொல்லப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட ஜனாதிபதி அபூபக்கர் (ரலி) இறைவனுக்கு தலைவணங்கி, சிரம் தாழ்த்தி நன்றி கூறி மகிழ்ந்தார்.

  நல்லவர்கள் நம்மை விட்டுச் சென்றால் அது நமக்கு கவலை தரும். தீயவர்கள் மரணமானால் அது உலகத்திற்கும், உலக மக்களுக்கும் நிம்மதி தரும் ஓய்வாகும். நல்லவர்களால் இந்த உலகம் நன்மை பெறட்டும்.

  நன்றி: மலை மலர் 
  Leave A Comment