• Login / Register
  • சோதிடம்

    ராகு-கேது பெயர்ச்சி: தோஷம் நீக்கும் பரிகாரங்கள்!

    வருகிற அக்டோபர் 8-ந்தேதி ராகு-கேது பெயர்ச்சி  நடைபெறுகிறது. இந்த நாளில் ராகு-கேது கிரகங்களால் நன்மை பெற சில வழிபாடுகளை செய்தால் நலமாக வாழலாம். ராகு -கேது அருளைப்பெற, நவக்கிரகங்களில் உள்ள ராகு- கேதுவுக்கு பச்சை கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்யலாம்.

    ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களுமே நாகங்கள். இந்த ராகு, கேது ஆகிய இரு கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் சர்ப்ப தோஷம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளதா என்பதை ராகு, கேது முதலிய கிரகங்கள் எந்த வீட்டில் உள்ளன என்பதை வைத்து அறிந்து கொள்ள முடியும்.

    பாம்பின் தலையை ராகு என்றும் உடலைக் கேது என்றும் குறிப்பிடுகிறார்கள். வானில் இருக்கும் ராகுவும், கேதுவும் பின்னோக்கி நகர்வதாக அறிவியலார் கூறுகின்றனர். ஆகையால் இவ்விரு கிரகங்களையும் சாயாகிரகங்கள் என்கிறது ஜோதிட நூல்கள். 
       
    இந்த ராகு கேது இந்த இரண்டு கிரகங்கள் நம்மை பயமுறுத்துவது அல்ல. உரிய காலகட்டங்களில் முறையான பரிகாரங்களை செய்வதன் மூலம் நற்பலன்களை  நிச்சயமாக அடைய முடியும்.
     
    சிதம்பரத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி தலத்தில் சவுந்தரநாயகி உடனாகிய அனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை அஷ்டநாகங்களும், அவர்களின் தலைவனான அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். நாகதோஷம், கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் அகன்றிட ராகு-கேது பெயர்ச்சியின்போது இங்கு வந்து வழிபடலாம்.

    பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நயினார்கோவில் என்ற ஊரில் சவுந்தரநாயகி சமேத நாகநாத சுவாமி சன்னிதி உள்ளது. இங்கும் ராகு-கேது பெயர்ச்சி அன்று சீர்காழியில் சிரபுரம் பகுதியில் உள்ள பொன்நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரமுடையார் கோவிலில் வழிபடலாம்.



    திருச்சி தெப்பக்குளம் கிழக்கு வீதியில் (மலைக்கோட்டை அடிவாரம்) நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

    காரைக்குடி செஞ்சை பகுதியில் பெரியநாயகி சமேத நாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. இங்கு நாக விநாயகர் சன்னிதியும் உண்டு. இங்கு வந்து இறைவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம்.

    செம்மங்குடியில் உள்ள கேதுபுரம் கேது தலம் ஆகும். இங்கு வழிபடலாம்.

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்-திருச்செந்தூர் பாதையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒரு தலமான தொலைவில் மங்கலம் சென்று வணங்கலாம்.

    மன்னார்குடி அருகில் பாமினியில் ஆதிசேஷன் வழிபட்ட தலம் உள்ளது. இங்கு வழிபட உடனடி பலன் கிடைக்கும்.

    மயிலாடுதுறை - பேரளம் அருகில் திருமீயச்சூரில் உள்ள ஸ்ரீலலி தாம்பிகை கோவில் பிரகாரத்தில் பன்னிரு நாகர் உள்ளன. இதற்கு பாலாபிஷேகம் செய்யலாம்.

    கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவில் என்ற ஊரில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் கல் கருடன் உள்ளது. அவர் உடலில் ஒன்பது இடத்தில் நாகர் உருவம் அமைந்துள்ளது. ஏழு வியாழக்கிழமை தொடர்ந்து அர்ச்சனை செய்யலாம்.

    கோவை -அவினாசி பாதையில் மோகனூர் அருகில் வாழை தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. இது ராகு-கேது பரிகார தலம், பிரார்த்தனை தலமாகும்.

    காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகேயுள்ள தலத்தில், மாகாளன் எனும் நாகம், காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள மூலவரான மகாகாளேஸ்வரரை வழிபட்டால் பலன் கிடைக்கும்.



    ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூர். இங்குள்ள வடிவுடையம்மன்-உடனுறை படம்பக்கநாதர் மற்றும் மாணிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு-கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

    கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம். நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள். ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.

    சிவகங்கை அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட மகமாயி அம்மன், கானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள். ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

    நன்னிலம்- குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்ச நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நீராடி, நாகநாத சுவாமியையும், நாகராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

    காளாஸ்திரி சென்று ராகு காலத்தில் பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்து வந்தால் சர்ப்ப தோஷம் விலகும். கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும் தோஷ நிவர்த்தி பெறலாம்.

    விருத்தாசலத்திற்கு தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் உள்ள நீலமலர் கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவினால் உண்டான தோஷங்கள் விலகும்.




    Leave A Comment