கமலா ஹாரிஸுக்கு ஆதரவு; போட்டியில் இருந்து விலகிய பைடன் அறிவிப்பு!
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியில் இருந்து விலகுவதாக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கட்சி மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்ததாக ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவிக்கப்பட்டார்.
வயோதிபம் காரணமாகவும் நோய் நிலை காரணமாகவும் அண்மைகால நடவடிக்கைள் தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
81 வயதான அதிபர் பைடன், தனது தேர்தல் பிரச்சாரத்தில் தடுமாற்றத்துடன் பேசி வந்தார். குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் உடனான முதல் நேரடி விவாதத்தின் போதும் தடுமாறினார்.
இது அவரது சொந்த கட்சியை சேர்ந்தவர்களையே அதிருப்தி அடைய செய்தது. அதன் காரணமாக அவர் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டுமென சொல்லப்பட்டது.
கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் அதிருப்தியுடன் இருந்தனர்.
இந்நிலையில், தேர்தலில் இருந்து அவர் விலகி உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தனது சமூக வலைத்தளம் மூலம் தனது முடிவை அறிவித்துள்ளார்.
“அமெரிக்க அதிபராக நான் பணியாற்றுவது எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம். இருந்தாலும் நான் தேர்தலில் இருந்து விலகுகிறேன். எஞ்சி உள்ள எனது பதவிக்காலத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவேன். இது ஜனநாயக கட்சி மற்றும் நாட்டின் நலன் சார்ந்து நான் எடுத்துள்ள முடிவு. இது குறித்து விரைவில் விரிவாக பேசுவேன்.
நான் மீண்டும் அதிபராக வேண்டும் என ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது அமெரிக்க மக்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. என்னுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு நன்றி.
கடந்த 2020-ல் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டதும் துணை அதிபர் வேட்பாளராக நான் தேர்வு செய்தது கமலா ஹாரிஸை தான். அதிபர் தேர்தலில் இருந்து நான் தற்போது விலகியுள்ள நிலையில் இம்முறை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அவருக்கு எனது முழு ஆதரவை வழங்க விரும்புகிறேன். நம் கட்சியினர் அனைவரும் ஒன்று கூடி ட்ரம்பை வீழ்த்த வேண்டும்” என பைடன் தெரிவித்துள்ளார்.
Leave A Comment