• Login / Register
  • முகப்பு

    காங்கிரஸ் MLA-கள் சட்டமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம்!

    ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-கள் சட்டமன்றத்தில் கருப்பு சட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறும் ஒருவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவார். தற்போது ராகுல் காந்தி இந்த பிரிவிலேயே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதி காலியனதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் நேற்று நாடு தழுவிய சத்தியாகிரக போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அதன்படி, டெல்லி தொடங்கி அனைத்து மாநிலங்களில் உள்ள காந்தி சிலைகள், மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகங்கள் முன்னர் இந்த சத்தியாகிரக போராட்டம் காலை 10 மணி தொடங்கி மாலை வரை நடைபெற்றது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில், தமிழ்நாட்டில் இந்தப் போராட்டத்தை சட்டமன்றத்துக்கும் எடுத்துச் செல்ல காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை ட்விட்டர் பதிவில்,

    “ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து நாளை சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க வேண்டும். ராகுல் காந்திக்கு ஆதரவாக சட்டமன்றத்தின் வேலை நேரத்தில் பேசவேண்டும். சட்டமன்றத்தை விட்டு வெளியே வராமல், இரவு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் (27) கருப்பு சட்டை அணிந்து தமது எதிர்ப்பினை பதிவு செய்ய உள்ள நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் உள்ளிருப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment