• Login / Register
  • விளையாட்டு

    சஹால் சுழலில் சிக்கி தோற்ற கொல்கத்தா அணி

    ஐபிஎல்லின் 15ஆவது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த தொடரின் 30ஆவது லீக் போட்டி நேற்று மும்பை பிரபோர்ன் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

    இதில் ஸ்ரேயாஷ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல் களமிறங்கினார்கள்.

    ஆரம்பம் முதலே கொல்கத்தா அணி வீரர்களின் பந்துகளை பட்லர் துவம்சம் செய்தார்.

    20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 217 ரன்களைக் குவித்தது. ஜாஸ் பட்லர் மிரட்டலாக விளையாடி 103 ரன்களை அடித்தார். இதில் 9 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடக்கம்.

    கொல்கத்தா அணியில் சுனில் நரேன்  2 விக்கெட்களை வீழ்த்தியது மட்டுமின்றி ரன்களையும் கட்டுப்படுத்தினார்.

    218 ரன்கள் எடுத்தால் வெற்றியென்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. போட்டியின் முதல் பந்திலேயே சுனில் நரேன் ரன்அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

    இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆரோன் பிஞ்ச், கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர், அசராமல் ராஜஸ்தான் அணியினரின் பந்துகளை நாலாபுறமும் விளாசித் தள்ளினார்கள்.

    ஆரோன் பிஞ்ச் 58 ரன்கள் எடுத்த போது பிரசித் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய வீரர்களில் நிதிஷ் ராணா மட்டுமே 18 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்கள்.

    இந்த நிலையில், 17ஆவது ஓவரை வீசிய யுஸ்வேந்திர சஹால் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர், ஷிவம் மாவி, பாட் கம்மின்ஸ் என தொடர்ந்து 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.


    இதன்மூலம் இந்த ஐபிஎல் தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை யுஸ்வேந்திர சஹால் படைத்தார். இதனையடுத்து 18ஆவது ஓவரில் உமேஷ் யாதவ் களமிறங்கி அதிரடியாக விளையாடி ஒரே ஓவரில் 20 ரன்களை எடுத்து அசத்தினார்.

    இறுதி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டன. அந்த சமயத்தில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஓபிடு மெக்காய் பந்துவீச வந்தார்.

    அந்த ஓவரில் ஷெல்டன் ஜாக்சன் மற்றும் உமேஷ் யாதவ்வை அவுட் ஆக்கி ராஜஸ்தான் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார் ஓபிடு மெக்காய்.

    கொல்கத்தா அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 210 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.


    Leave A Comment