• Login / Register
  • விளையாட்டு

    கே.எல்.ராகுல் சதம்: மும்பை அணிக்கு 200 ரன்கள் இலக்கு

    பரபரப்புக்கும் விறு விறுப்புக்கும் பஞ்சமில்லாத ஐபிஎல் தொடரின் வார இறுதி நாளான இன்று நடைபெற்று கொண்டிருக்கின்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. 

    மும்பை பிரபோர்ன் விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகின்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து லக்னோ அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், குவின்டன் டீகாக் களமிறங்கினார்கள்.

    இருவரும் போட்டியில் தொடக்கத்தில் இருந்தே அணிக்கு ரன்களை வேகமாக சேர்க்க தொடங்கினர். ஃபேபியன் ஆலன் வீசிய 6 ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் குவின்டன் டீகாக் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

    13 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 24 ரன்களை டீகாக் எடுத்தார். இதன் பிறகு மணிஷ் பாண்டே களமிறங்கினார்.

    லக்னோ அணி பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் என்ற நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியது. பும்ரா வீசிய 12ஆவது ஓவரில் 2 ரன்களை அடித்ததன் மூலம் 50 ரன்களை கே.எல்.ராகுல் கடந்தார்.

    14ஆவது ஓவரை வீசிய முருகன் அஸ்வின், எதிர் முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மணிஷ் பாண்டேவை போல்ட்டாகி அசத்தினார். மணிஷ் பாண்டே 29 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 38 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதன் பிறகு, மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 10 ரன்கள் எடுத்த நிலையில், வந்த வேகத்தில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.

    நான்காவது விக்கெட்டுக்கு தீபக் ஹூடா 8 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்களில் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

    20 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்களை இழந்து 199 ரன்களை எடுத்தது.

    இன்றைய போட்டியில் கேப்டன் ஆப் தி ஷிப்பாக, பொறுப்பாகவும், ஒன்மேன் ஆர்மியாக அதிரடியாகவும் கே.எல்.ராகுல் விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என மொத்தம் 103 ரன்களை அடித்தார்.


    வழக்கம் போல் மும்பை அணியின் மோசமான பீல்டிங்கே, லக்னோ அணிக்கு ரன்களை உயர்த்த உதவியது.

    மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள், விக்கெட்டை வீழ்த்த தவறியது மட்டுமின்றி ரன்களை வாரி வழங்கினார்கள்.

    ஜெயதேவ் உனத்கட், முருகன் அஸ்வின், ஃபேபியன் ஆலன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

    மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் தொடரில் மூன்றாவது சதத்தினை கே.எல்.ராகுல் கடந்தார்.

    கே.எல்.ராகுல் கடந்த 2019ஆம் ஆண்டு மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 64 பந்துகளில் 100 ரன்களை அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இவர் 2020ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 63 பந்துகளில் 139 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்கை நோக்கி மும்பை அணி இன்னும் சற்று நேரத்தில் களமிறங்கவுள்ளது.

     

    Leave A Comment