• Login / Register
 • கட்டுரைகள்

  நீங்கா நினைவில் புரட்சித்தலைவர்; 35 ஆவது நினைவு நாள் இன்று!

  'புரட்சித்தலைவர்' என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர் மறைந்து 35 ஆண்டுகள் ஆகின்றன. அவர் இந்த மண்ணைவிட்டுத்தான் மறைந்திருக்கிறார். மக்கள் மனதை விட்டு மறையவில்லை, மறையவும் மாட்டார். 

  எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தைத் தொடங்கியதே தொண்டர்கள் நலனுக்காகத்தான்.  தன்னை நம்பி வந்த தொண்டர்கள் எந்த நிலையிலும் தன்னால் பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்திற்காகத்தான். 

  அரசியலில் கடைசித் தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்பதை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர். தனது விசுவாசமான தொண்டனைப் பாராட்டி கெளரவப்படுத்தத் தயங்காதவர். 1972-ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டபோது, சென்னை, சைதாப்பேட்டையில் தி.மு.க. சார்பில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி அக்கூட்டத்தில் கலந்துகொண்டார். 

  அந்தப் பொதுக்கூட்ட மேடையில் திடீரென ஏறிய சைதை துரைசாமி, மு. கருணாநிதிக்கு எலுமிச்சை மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரை தி.மு.க.வினர் சரமாரியாகத் தாக்கினர். அது மட்டுமல்ல, காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.    

  இந்த நிகழ்ச்சி எம்.ஜி.ஆர். மனதில் நீங்காத நிகழ்வாக இடம் பெற்றது. சைதை துரைசாமியை சரியான விதத்தில் கெளரவிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தார். 
  1983-ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெ. ஜெயலலிதா நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பங்கேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அவரும் பங்கேற்றுப் பேசினார்.  

  ஆனால் சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மட்டும் சற்று வித்தியாசமானது. எம்.ஜி.ஆர். தனது விசுவாசமான தொண்டனை அக்கூட்டத்தில் பாராட்டி கெளரவிக்க முடிவு செய்தார். மற்ற எல்லா ஊர்களிலும் நடந்த பொதுக்கூட்டங்கள் 'சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்' என்று விளம்பரப்படுத்தப்பட்டது.  ஆனால் சைதாப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மட்டும், சைதை துரைசாமியின் தியாகத்திற்கான பாராட்டுக் கூட்டம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.  

  இப்படி ஒரு கெளரவம், ஒரு பரிசு, கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்குக் கூட கிடைத்தது இல்லை. சைதை துரைசாமி என்ற ஒரு உண்மையான தொண்டருக்குக் கிடைத்தது. அக்கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் ஜெ. ஜெயலலிதா, சைதை துரைசாமிக்கு மலர் கிரீடம் அணிவித்து, மாலை சூட்டி கெளரவப்படுத்தினார். சைதை துரைசாமியை கெளரவிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நீண்ட நாட்களாக எண்ணியிருந்தது நிறைவேறியது.

  மற்றொரு நிகழ்வையும் குறிப்பிட வேண்டும். 1977-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது.  அப்போது ஒரு இரவு எம்.ஜி.ஆர். தனது மாம்பலம் அலுவலகத்தில் கட்சியினரை சந்தித்துவிட்டு மிகுந்த களைப்புடன் மேலே உள்ள தனது அறைக்கு உறங்கச் சென்றார்.  

  அப்போது முன்னாள் அமைச்சரும், தற்போதைய கழகத்தின் மூத்த தலைவருமான சி. பொன்னையன், அவசர அவசரமாக வந்தார். என்னிடம் தலைவரை சந்திக்க வேண்டும் என்று கூறினார். நான் அவரிடம் 'தலைவர் இப்போதுதான் மேலே உள்ள தன் அறைக்கு உறங்கச் சென்றார்' என்று கூறினேன். அவரோ விடாப்பிடியாக கண்டிப்பாக சந்தித்தே ஆக வேண்டும் என்று கூறினார்.   

  நான் தலைவரிடம் இன்டர்காமில் பொன்னையன் அவசரமாக பார்க்க விரும்புவதைக் கூறினேன். எம்.ஜி.ஆர். பொன்னையனிடம் என்ன விஷயம் என்று கேட்டார்.  அவர், நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை திருச்செங்கோடு தொகுதியில் நிற்க கட்சியினர் வற்புறுத்துவதாகவும், தான் செய்து கொண்டு இருக்கும் வழக்குரைஞர் பணி பாதிக்கப்பட்டு வருமானம் இல்லாத நிலை உருவாகிவிடும் என்ற காரணத்தால் தனக்கு சீட் வேண்டாம் என்றும் கூறினார்.  

  இதைக் கேட்ட எம்.ஜி.ஆர். பொன்னையனை தேர்தலில் நிற்கச் சொன்னதோடு மற்றதையெல்லாம் தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார். அவரும் தலைவர் கட்டளையை ஏற்று திருச்செங்கோடு தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டார்.  அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர். அவரை அமைச்சராக்கினார். உண்மையான தொண்டர்களை எம்.ஜி.ஆர். என்றுமே  கைவிட்டதில்லை. 

  1987 டிசம்பர் 22 அன்று சென்னை, கிண்டியில் ஜவாஹர்லால் நேரு சிலை திறப்பு விழாவில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.  அன்று இரவு எம்.ஜி.ஆருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர் பி.ஆர்.எஸ். எம்.ஜி.ஆருக்கு இருதய கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால், எம்.ஜி.ஆர். தான் நன்றாக இருப்பதாகவும்,  மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்தார்.  
  டாக்டர் பி.ஆர்.எஸ். இருதய நோய் நிபுணர்களை வரவழைத்தார். அவர்கள் எம்.ஜி.ஆர். உடல்நிலையை சோதித்துப்பார்த்து, உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து பை-பாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.  ஆனால் எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு செல்ல மறுத்ததோடு, தனக்கு மரணம் நேரிட்டால் அதை மனநிறைவோடு ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார்.  

  டிசம்பர் 23 அன்று இரவு பத்து மணிக்கு எம்.ஜி.ஆர். உடல்நிலையைப் பரிசோதித்த டாக்டர் பி.ஆர்.எஸ். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனால், எம்.ஜி.ஆர். மருத்துவமனை செல்ல  மறுத்துவிட்டார். டிசம்பர் 24 அதிகாலை தன்னைத் தழுவிய மரணத்தை மனநிறைவோடு ஏற்றுக் கொண்டார். 
  மறுநாள் டிசம்பர் 25 அன்று டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் திறப்பு விழா நடைபெற இருந்தது. தான் உயிரோடு இருக்கும் வரை தன்னுடைய பெயரை எந்தவொரு திட்டத்திற்கும் வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர். தனது பெயரிலான பல்கலைக்கழக திறப்பு விழாவுக்கு முதல் நாளன்று மறைந்தார்.

  இன்று (டிச. 24)  எம்.ஜி.ஆர். நினைவுநாள்.  

  கட்டுரையாளர்: கே.மகாலிங்கம்
  எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றியவர்.

  Leave A Comment