• Login / Register
  • முகப்பு

    கோகுல்ராஜ் ஆணவக்கொலை: குற்றவாளிகளுக்கான ஆயுள் தண்டனை உறுதி

    கடந்த 2015-ம் ஆண்டு இடம்பெற்ற கோகுல்ராஜ் ஆணவக்கொலை தொடர்பான வழக்கில், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை குற்றவாளிகளுக்கு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து  இன்று தீர்ப்பளித்துள்ளது.

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் நிரூபணமாகியுள்ளது. யுவராஜ் உள்ளிட்டோருக்கு அளித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும். மதுரை சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்தப் பிழையும் இல்லை என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

    உயர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து முக்கிய குற்றவாளி யுவராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வெளியிட்டு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்த வழக்கில், 5 பேர் விடுதலையை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை பேரவைத் தலைவா் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

    ஓமலூரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 24-ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், தொட்டிபாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாகக் மீட்கப்பட்டாா்.

    கோகுல்ராஜ், கல்லூரியில் படிக்கும்போது சுவாதி என்ற பெண்ணைக் காதலித்ததாகவும், அவா்கள் இருவரும் 2015 ஜூலை மாதம் 23-ஆம் தேதி திருச்செங்கோடு மலைக் கோயிலுக்கு வந்தபோது கோகுல்ராஜ், யுவராஜால் கடத்தப்பட்டதாகவும் இந்த விவகாரத்தில் கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகவும் சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கோகுல்ராஜ் கொலை வழக்கு, உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில், கைதான சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டா் பேரவை நிறுவனா் யுவராஜ், அருண், குமாா் என்ற சிவகுமாா், சதீஷ்குமாா், ரகு என்ற ஸ்ரீதா், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதா் ஆகிய 10 பேருக்கும் சாகும்வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

    இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்தத் தீா்ப்பை எதிா்த்து, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும், ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனா். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, கோகுல்ராஜ் கடைசியாக திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலுக்கு வந்திருந்தாா். அவரது வருகை அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

    வழக்கு விசாரணையின்போது, கோகுல்ராஜும் சுவாதியும் கோயிலுக்குள் வரும் காட்சியும், யுவராஜ் மற்றும் அவரது கும்பலுடன் வெளியே வரும் காட்சியும் பதிவாகியுள்ள நிலையில் மீண்டும் கோயிலுக்குள் வந்த யுவராஜ், அவரது ஆட்கள் எந்த வழியாக வெளியேறினாா்கள் என்பது குறித்து கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்பீடு செய்து நீதிபதிகளே நேரில் திருச்செங்கோடு கோயிலுக்கு வந்து ஆய்வும் செய்தனா்.

    முக்கிய சாட்சியாக இருந்து பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியும் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டு, நீதிபதிகள் நேரடியாக விசாரணை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    Leave A Comment