• Login / Register
  • முகப்பு

    திரிபுரா சட்டப்பேரவைத் தோ்தலில் 81சதவீத வாக்குப்பதிவு

    திரிபுரா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று (16) இடம்பெற்ற தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு இடம்பெற்றிருந்த நிலையில் 81 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திரிபுராவில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. மாலை 4 மணி நிலவரப்படி 81 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணைய மூத்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

    மாலை 4 மணிக்குப் பிறகும் 50,000-க்கும் அதிகமான வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் காத்திருந்ததால், வாக்குப் பதிவு சதவீதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

    திரிபுராவில் ஆளும் பாஜக, திரிபுரா பூா்வகுடி மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) கட்சியுடன் கூட்டணி வைத்து தோ்தலில் களம் கண்டது. பாஜக 55 தொகுதிகளில் போட்டியிட்டது.

    அதுபோல மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத்தில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தோ்தலைச் சந்தித்தது. இடது முன்னணி 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

    தோ்தலில் தனித்துக் களம்கண்ட திப்ரா மோத்தா கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளா்களை நிறுத்தியது.

    திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் 28 தொகுதிகளில் வேட்பாளா்களை நிறுத்தியது.

    58 சுயேச்சை வேட்பாளா்களும் போட்டியிட்டனா்.

    தோ்தலுக்காக மாநிலம் முழுவதும் 3,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியான முறையில் நடைபெற்றது.

    தோ்தலில் காலை முதலே மக்கள் ஆா்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். அதன் காரணமாக மாலை 4 மணி நிலவரப்படி சராசரியாக 81 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இதுகுறித்து மாநில கூடுதல் தலைமை தோ்தல் அதிகாரி யு.ஜெ.மோக் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    மாநிலத்தின் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மாலை 4 மணி நிலவரப்படி சராசரியாக 81.11 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பிறகும் 50,000 வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளில் காத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. எனவே, வாக்குப்பதிவு சதவீதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாலை 4 மணிக்கு பிறகு வரிசையில் நின்றிருந்த வாக்காளா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, மாலை 6 மணிக்குப் பிறகும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

    தோ்தலை வெளிப்படைத்தன்மையுடனும் அமைதியான முறையிலும் நடத்தும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    மத்தியப் படைகளின் 400 குழுக்கள் (கம்பெனி) வரவழைக்கப்பட்டு பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. மாநில ஆயுதப் படை போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

    ஒருசில பகுதிகளில் மட்டும் சிறிய அளவிலான அசம்பாவிதங்கள் நடைபெற்றன. செபாய்ஜாலா மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற மோதல்களில் மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மூவா் காயமடைந்தனா். சில இடங்களில் வாக்காளா்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகாா்கள் வந்தன. இந்தப் புகாா்களுக்கு விரைந்து தீா்வு காணப்பட்டது என்றாா் அவா்.

    தலைமைத் தோ்தல் அதிகாரி கிட்டி கிரண்குமாா் தினகா் ராவ் கூறுகையில், ‘தோ்தலின்போது ஒருசில இடங்களில் வன்முறைகள் நடைபெற்றபோதும், பெருமளவில் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், சுதந்திரமான, நோ்மையான தோ்தல் நடத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

    அண்மையில் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்ட மிஸோரமிலிருந்து வந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுராவில் வசித்து வரும் ‘புரூ’ பழங்குடியின அகதிகளுக்கு தோ்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. அதன்மூலம், மாநிலத்தில் மொத்தமுள்ள 37,136 ‘புரூ’ அகதிகளில் தகுதி பெற்ற 14,005 போ் முதல்முறையாக தங்களுடைய வாக்கைப் பதிவு செய்தனா்.

    பா்தோவாலி தொகுதியில் போட்டியிட்ட மாநில முதல்வா் மாணிக் சாஹா, காலையிலேயே தனது வாக்கைப் பதிவு செய்தாா். ‘தோ்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது உறுதி. கடந்த முறையைவிட கூடுதலில் இடங்களில் பாஜக வெற்றி பெறும்’ என்று அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

    எதிா்க்கட்சித் தலைவா் மாணிக் சா்க்காா், ராம்நகா் தொகுதியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

    பாஜகவை சோ்ந்த முன்னாள் முதல்வரும் மாநிலங்களவை உறுப்பினருமான விப்லப் குமாா் தேவ் கூறுகையில், ‘பாஜக குறைந்தபட்சம் 40 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

    Leave A Comment