• Login / Register
  • செய்திகள்

    நெல்லை ரயிலில் சிக்கிய ரூ.3.98 கோடி: வருமானவரித் துறையிடம் ஒப்படைப்பு


    தாம்பரத்தில் நெல்லை ரயிலில் பறக்கும் படையினரால் பறிமுதல்செய்யப்பட்ட ரூ.3.98 கோடி பணம்  வருமானவரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, சென்னை எழும்பூரிலிருந்து கடந்த 6-ம் தேதி புறப்பட்ட நெல்லை ரயில் தாம்பரம் வந்தபோது, பறக்கும் படையினா் சோதனை நடத்தி ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3,98,91,500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். இது தொடர்பாக சதீஷ், பெருமாள் மற்றும் நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது சதீஷ் என்பவர் புரசைவாக்கத்தில் உள்ள நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் வேலை செய்வதாகவும், அவரிடம் ஜெய்சங்கர் என்பவர் வாக்காளர்களுக்குத் தர 4 பைகளில் 500 ரூபாய் கட்டுகளாக பணத்தைக் கொடுத்தனுப்பியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார்.

    அதேபோல திருவல்லிக்கேணி யில் உள்ள ஹோட்டலில் ஆசைத்தம்பி என்பவர் கொடுத்தனுப்பிய பணத்துடன் பெருமாள் என்பவர் தன்னுடன் பயணித்ததாக சதீஷ்தெரிவித்தார். இந்த பணம் முழுவதும் நெல்லை தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் சார்பாக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு தங்களிடம் கொடுக்கப்பட்டதாக சதீஷ் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இந்நிலையில் தாம்பரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படி சென்னை வருமானவரித் துறைசார்பில் செங்கல்பட்டு மாவட்டஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆட்சியர் உத்தரவின்படி நேற்று முன்தினம் தாம்பரம் வட்டாட்சியர் நடராஜ், தாம்பரம் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்தை சென்னை வருமானவரித் துறை உதவி ஆணையர் பாலசந்திரனிடம் ஒப்படைத்தார்.


    Leave A Comment