• Login / Register
  • செய்திகள்

    சிங்கள அரசியல் சக்திகளை ஒருபோதும் நம்பவே முடியாது - பேராசிரியர் ரகுராம் திட்டவட்டம்!

    சிங்கள அரசியல் சக்திகளை தமிழர்கள் ஒருபோதும் நம்பவே முடியாது என்பதுடன் சிவராம் அண்ணையின் பட்டறிவின் வழியே சிங்கள அரசியல் சக்திகளுக்கான ஆதரவாக தமிழர் தரப்பின் நிலைப்பாடு எப்போதுமே இருக்க முடியாது என்றும் அவ்வாறானதொரு முடிவு எடுக்கப்படுமாக இருந்தால் அது ஒரு தவறான வழிகாட்டலாகத்தான் இருக்கும் எனவும் பேராசிரியர் சி.ரகுராம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் கடந்த 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்த படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்று சிவராம் நினைவு உரையாற்றிய யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

    தெற்கு அரசியலை சிவராம் அவர்கள் நன்றாக உணர்ந்திருந்தார். தெற்கு அரசியலில் அவருக்கு ஆரம்பத்தில் ஒரு நாட்டம் இருந்தது. ஆரம்ப காலங்களில் அவர்சார்ந்த அமைப்பு ஜேவிபியுடன் கொண்டிருந்த தொடர்புகள் வழியாக தெற்கிலே எங்களுடைய நியாயங்களை எங்களுடைய போராட்டத்தின் வலுவை எங்களுடைய போராட்டத்தின் செல்நெறியை எடுத்துச் செல்லலாம் என்ற மிகப்பெரிய ஆர்வம் அவரிடம் இருந்தது.

    அதனை அவரது பல எழுத்துகளிலும் வெளிப்படுத்தியிருந்தார். தெற்கில் உள்ள புத்திஜீவிகள், அரசியல் கட்சியினர், சிவில் சமூகத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள் என பலதரப்பினருடன் பல சந்திப்புகளையும் சிவராம் அண்ணை நடத்தியிருந்தார். அவருக்கு ஏராளம் சிங்கள நண்பர்கள் இருந்தார்கள். பத்திரிகை நண்பர்கள், ஊடகவியலாளர்கள், கட்சி தரப்பினர் என பலருடன் நெருங்கிய தொடர்புடன் இருந்தார்.

    ஆனால் அவர் ஒரு கட்டத்தில் மிகத்தெளிவான ஒரு முடிவுக்கு வந்தார். சிங்களத்தை நாங்கள் மாற்ற முடியாது. சிங்கள அரசியல்வாதிகளை நாங்கள் மாற்ற முடியாது. சிங்கள அரசியல் சூழலை எங்களால் மாற்ற முடியாது என்ற தெளிந்த நிலைப்பாட்டிற்கு சிவராம் அண்ணை வந்தார்.

    அவர் சந்தித்த பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சியினர் என சகல தரப்பினரும் ஒரு வரையறைக்குள் இருந்தார்கள். ஆழமாக அவர்களுக்குள் இறங்கியிருக்கக்கூடிய கருத்தியல் தளத்திற்கு அப்பாலே அவர்கள் எங்களுக்காக சிந்திப்பார்கள் அல்லது எங்களுடைய நியாயங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதெல்லாம் ஒரு பொய்க்கதை என்பதை அவர் மிகத் தெளிவாகவே சுட்டிக்காட்டியிருந்தார்.

    தமிழர்களாகிய நாங்கள் இன்று அந்த சந்தியில் தான் வந்து நிற்கின்றோம். எந்தக்கட்டத்திலும் சிங்கள அரசியல் சக்திகளை, சிங்கள அரசியல்வாதிகளை, அடுத்துவரக்கூடிய ஆளும் தரப்புகளை நாங்கள் நம்பவே முடியாது என்பதனை அன்றில் இருந்து இன்றுவரை வரலாறு எங்களுக்கு திரும்பத் திரும்ப சொல்லவந்தாலும் கூட அதை மறுத்து நாங்கள் குறுக்கோட்டம்  ஓடுவதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றோம்.

    உண்மையில் சிவராம் அண்ணாவின் இன்றைய நினைவு மீட்டலிலே சொல்லக்கூடிய விடயமும் அதுதான். எங்களை விடவும் சிங்கள அரசியல் கட்சிகளுடன், சமூக செயற்பாட்டாளர்களுடன் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவர். ஆழமான கலந்துரையாடல்களை நடத்தியருந்தவர். அவற்றினூடாக அவர் பெற்ற அனுபவம் என்பது சிங்கள அரசியல் சக்திகளையோ, ஆளும் தரப்புகளையோ அல்லது அடுத்து வரும் நம்பிக்கைதரக் கூடியதாக நாங்கள் கற்பனை செய்கின்ற விடயங்களையோ அவர் நம்பத்தயாராகவே இல்லை.

    சிவராம் அண்ணையின் நினைவு மீட்டல் மூலமாக எங்களுக்கு கிடைக்கின்ற மிக முக்கிய செய்தி இதுதான். சிங்கத்தின் இன்றைய அரசியல் சூழலோடு சிவராம் அண்ணாவை மீட்டு பார்க்கின்றபோது எங்களுக்கு கிடைக்கின்ற முக்கயமான செய்தி நாங்கள் யாரையும் நம்பமுடியாது. எவரையும் நம்பமுடியாது. யாருக்காகவும் எங்கள் பெறுமதியான வாக்குகளை அளிக்கவும் முடியாது. ஆகவே எங்களுக்கு இருக்கக்கூடிய தெரிவுகள் எதுவென்பதை எது சரியான தெரிவென்பதை அது பொதுவேட்பாளராக இருக்கலாம் அல்லது நாங்கள் வாக்களிக்காமல் ஒதுங்கி இருக்கலாம். இந்த இரண்டு தெரிவுகளிலே எது சரியானது என்பதனை நாங்கள் விஞ்ஞானபூர்வமாக அறிவியல்பூர்வமாக தெரிவு செய்யவேண்டும்.

    இந்த இரண்டு நிலைப்பாடுகளுமே ஒருமித்த புள்ளியில் இருப்பதை நான் பார்க்கிறேன். சிங்கள அரசியல் சக்திகளை நாங்கள் நம்ப முடியாது என்பதாகும். நாங்கள் இந்த தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாகவோ நிராகரிப்பதாகவோ இருந்தாலும் சரி பொது வேட்பாளரை தேடுவதாக இருந்தாலும் சரி இந்த இரண்டு நிலைப்பாடுகளுமே ஏதோ ஒரு வகையில் அந்த புள்ளியில் தான் வந்து நிற்கின்றன. அது நாங்கள் தெற்கு அரசியல் சக்திகளை நம்ப முடியாது. எதிர்காலத்திற்காக நாங்கள் எங்களை பணயம் வைக்க முடியாது என்பதைத்தான் சொல்கின்றன.

    இந்த கட்டத்தில் தான் நாங்கள் எது சரியான முடிவு என்பதை கட்சி அரசியல் சார்ந்தில்லாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி ஒரு விஞ்ஞானபூர்வமாக அரசியல் அறிவுபூர்வமாக நாங்கள் தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். முடிவு எங்கள் கரங்களிலேயே இருக்கின்றது.

    சிவராம் அண்ணாவின் நினைவுமீட்டலின் அடிப்படையில் ஒன்றை மட்டும் உறுதியாக கூற முடியும். சிங்கள அரசியல் சக்திகளுக்கான ஒரு ஆதரவாக எப்போதுமே இருக்க முடியாது என்பதனை நிச்சயமாக கூற முடியும். அது ஒரு தவறான வழிகாட்டலாகத்தான் இருக்கும் என்ற சிவராம் அண்ணாவின் பட்டறிவை இன்றைய நாளில் எங்களின் மனங்களில் நிறுத்திக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மிக துரிதமாக முடிவுகளை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். என்றார்.

    Leave A Comment