• Login / Register
  • செய்திகள்

    ரணில், ராஜபக்சக்கள் மீது சர்வதேச விசாரணை - IMF இடம் அனந்தி சசிதரன் கோரிக்கை!

    இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்கள் மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போன்றவர்களே காரணம் என கூறப்பட்டு வந்தாலும் நாட்டில் இருந்து சூறையாடப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை மீளவும் இலங்கைக்குள் கொண்டுவருவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே இது தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்வரவேண்டும் என முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார்.

    பருத்தித்துறையில் உள்ள யாழ். வடமராட்சி ஊடக இல்ல அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) பிற்பகல் நடத்திய ஊடகசந்திப்பில் முன்னாள் வடமாகாண மகளிர் விவகார அமைச்சரும் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமுமான அனந்தி சசிதரன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

    இன்றைய இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் குறித்து பேசப்படுகின்றது. கடந்த காலங்களில் இதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலத்தில் மத்திய வங்கி பிணை முறை மோசடி பெரிதாக பேசப்பட்டது. பின்னர் அதுவும் மறக்கப்பட்டுவிட்டது. ராஜபக்ச சகோதரர்களே தற்போதைய பாரிய பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக பேசப்பட்டு வருகிறது.

    இவ்வாறு இலங்கையில் இருந்து சூறையாடப்பட்ட பணங்கள் எல்லாம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு அவர்கள் வசதியாக வாழும் நிலையை பார்க்கிறோம். பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் ராஜபக்ச சகோதரர்கள் என நீதிமன்றத்தினாலும் சுட்டிக்காட்டப்பட்டாலும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட பணம் மீளவும் இலங்கைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என எவரும் கோரிக்கை முன்வைக்கவில்லை. வெறுமனே காரணங்களை கண்டறிந்து பேசப்படுகின்றதே தவிர அந்த இழப்பீடுகளை மீளப்பெறுவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

    இவ்வாறான நிலையில் அதே ஆட்சியாளர்கள் தான் இன்றும் ஆட்சியை தொடர்கின்றனர். அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். மீளவும் இதே மோசடியான நபர்கள் அரசியலில் இறங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதனையும் அவதானிக்க முடிகின்றது. பொருளாதார நெருக்கடிக்கு காரணமான சகல சூத்திரதாரிகளையும் மக்கள் ஒட்டுமொத்தமாக புறம்தள்ள வேண்டும்.

    இலங்கை சந்தித்துள்ள வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ப்பட வேண்டும். அவ்வாறு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சூறையாடப்பட்ட பணம் நாட்டிற்கு மீளக் கொண்டுவரப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே இலங்கைக்கு கடன்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்வர வேண்டும். மேற்குறித்த பொறிமுறை கடந்து நிபந்தனையற்ற முறையில் கடன்களை வழங்குவதானது ஏழை மக்களது தலையில் மீண்டும் வரிச்சுமைகளை சுமத்துவதாகவே அமையும். என தெரிவித்தார்.

    ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஜேவிபி தரப்பினர் தமிழர் விவகாரங்கள் தொடர்பில் கருத்துகளை கூறி வருவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், 

    வடக்கிலும் தமது தேர்தல் களத்தை விரிவுபடுத்தி மும்முரமாக செயற்பட்டு வரும் ஜேவிபியினர் தமிழர்களின் உரிமைகள் தொடர்பில் பேசுவது தேர்தலுக்காகவே. வடக்கு கிழக்கு இணைப்பை நீதிமன்றம் சென்று பிரித்தவர்கள் பிரித்தவர்கள் இன்று தமிழர்களது உரிமைகளைய கொடுக்க வேண்டும் என்றும் அது நியாயமானது என்றும் அவர்கள் கூறிவருவதானது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு பேசிவருகின்றனர்.

    வடக்கு கிழக்கை பிரித்ததன் மூலம் பெரும் வரலாற்று தவறைச் செய்துவிட்டோம் என்று ஜேவிபியின் தலைமைகள் ஒப்புகொள்ளாத நிலையிலேயே இவ்வாறு தமிழர்களது உரிமைகள் தொடர்பில் பேசிவருகின்றனர். ஈழத்தமிழர்களுக்கு எதிராக இவர்களுமாக சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டே பெரும் அழிவுகளை மேற்கொண்டார்கள்.

    இப்படியான நிலையில் தமிழர்களுக்கான தீர்வு தொடர்பில் அவர்கள் பேசுவதும் எமது இளைஞர்கள் சிலரிடம் அவர்கள் ஏதாவது செய்வார்கள் என்பது தொடர்பிலும் எதிர்பார்ப்பு இருப்பதனை காணக்கூடியதாக இருக்கிறது. உண்மை வரலாற்றினை எமது இளைஞர், யுவதிகள் திரும்ப பார்க்க வேண்டும்.

    சுயநிர்ணய உரிமையுடன் கூடிய இணைந்த வடக்கு கிழக்கில் சுயாட்சி அதிகாரத்தையே தமிழர்களாகி நாம் கோரிநிற்கின்றோம். அதனை அங்கீகரிக்காது உரிமைகள் தொடர்பில் பேசி வருவதானது தேர்தலுக்கான பேச்சுகளாகவே காணப்படுகிறது. கடந்த காலத்தில் இதுபோன்று ஆதரவாக பேசி தமிழர்களது வாக்குகளை பெறுவதும் பின்னர் தமிழர்களின் உரிமைகளுக்கு எதிராக செயற்பட்டதனையும் நாங்கள் பார்த்தே வருகின்றறோம். இதனை தற்கால இளைஞர், யுவதிகள் புரிந்து கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.

    Leave A Comment