• Login / Register
  • செய்திகள்

    சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது; சுரேஷ் பிரேமச்சந்திரன் பதிலடி!

    தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் அதனை மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் பரீட்சித்து பார்க்க முடியாது எனவும் அவ்வாறு தமிழர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது சிங்கள தரப்பை கோபப்படுத்தி இனவாதத்தை தூண்டும் விதமாகவே அமையும் என தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து அற்பத்தனமானது என ஈபிஆர்எல்எவ் கட்சி தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    ஈபிஆர்எல்எவ் கட்சி தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் நடத்திய ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.

    தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசு கட்சி பாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அண்மையில் கருத்து தெரிவிக்கையில், குமார் பொன்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் தமிழ் பொது வேட்பாளராக நின்றதும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரிந்தும் தற்போது தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் சிங்கள தரப்பை விரக்தியடையவும் அவர்களை எதிர்வினையாற்ற செய்யவும் வாய்ப்பு உள்ளதாக கருத்து தெரிவித்திருந்தமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

    முதலாவதாக, இலங்கை ஒரு ஜனநாயக நாடு இங்கு  யாரும் தேர்தலில் போட்டியிடலாம். அந்த வகையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான சகல உரித்துகளும் இந்த நாட்டில் வாழக்கூடிய சகல பிரசைகளுக்கும் இருக்கின்றது. ஆகவே தமிழர்கள் தரப்பில் யாரும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என யாரும் வரையறைகளை விதிக்க முடியாது.

    இரண்டாவது, சுமந்திரன் எடுத்துக்காட்டாக கூறும் குமார் பென்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை. தமது கட்சி சார்பிலும், சுயேட்சையாகவுமே அவர்கள் போட்டியிட்டார்கள். ஒட்டுமொத்த தமிழ் கட்சிகளும் இணைந்து பொதுவான தேவை கருதி பொதுவேட்பாளராக முன்னிறுத்தி மக்களிடம் ஆதரவு கோரும் வகையில் அவர்கள் போட்டியிட்டிருக்கவில்லை.

    அன்றைய காலக்கட்டத்தில் அவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் போட்டியிட்டது என்பது வேறு விடயம். ஆனால் இன்று பொதுவேட்பாளர் விடயம் என்பது அவ்வாறு அல்ல. தமிழ் மக்களின் சார்பில் சில விடயங்களை பூர்த்தி செய்வதற்காக அவ்விடயங்கள் தொடர்பில் சிங்கள அரசியல் சமூகத்திற்கும், ராஜதந்திரிகளுக்கும் தெளிவுபடுத்துவதற்காகவும், ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய சக்திகளும் இணைந்து நாங்கள் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றித்தான் ஆலோசித்திருக்கின்றோம்.

    சட்டத்தரணியான சுமந்திரன் முன்னைய வேட்பாளர் முயற்சிகளுக்கும் தற்போதைய தமிழ் பொதுவேட்பாளர் முயற்சிக்கும் இடையேயான வேறுபாடுகளையும் அவர் பகுத்து ஆராய வேண்டும். வேண்டும் என்றே வீம்புக்காக எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்த்து கருத்து சொல்லிவிட்டு போவதனாள் எவ்வித பலன்களும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

    1978 ஆம் ஆண்டு நாட்டிற்கு ஜனாதிபதி தேர்தல் முறை ஒன்று கொண்டுவரப்பட்டதில் இருந்து நாங்கள் பல தடவைகள் பலருக்கு வாக்களித்து தான் இருக்கின்றோம். ஆனால் அதனாள் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை.

    எனவேதான் மிக பலதடவைகள் சகல ஜனாதிபதிகளினாலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். ஆகவே அந்த வகையில் நாங்கள் இந்த முறை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாது இலங்கை அரசாங்கமோ சகல வேட்பாளர்களும் தப்பித்துக்கொள்கின்றார்கள் என்பதனை வெளிக்காட்டும் முகமாகவும், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாது இந்த நாட்டில் எந்த பிரச்சினைக்கும் தீர்க்கமுடியாது என்பதனை வெளிக்கெணரும் முகமாகவும் தமிழ் மக்களது வாக்குகளை ஒருசேர ஒரு தமிழ் வேட்பாளருக்கு போடுவதற்கு விரும்புகிறோம்.

    அதற்கு ஜனநாயகத்தில் இடம் இருக்கிறது. இது எந்தவிதமான இன பாகுபாடான விடயமும் அல்ல. எமது சுயமரியாதையை, உரிமைகளை காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் தெரிந்தெடுத்திருக்கக்கூடிய ஒரு வழிமுறையாகும்.

    இதனால் சிங்கள மக்கள் கவலைகொள்வார்கள் என்றோ அல்லது சிங்க அரசியல் கட்சிகள் இதனை எதிர்ப்பார்கள் என்றோ யோசிப்பது அர்த்தமற்றதாகும். சிங்கள மக்களுக்கு இந்த நாட்டில் எவ்வளவு தூரம் ஜனநாயக உரிமை இருக்கிறதோ அவ்வளவு தூரம் தமிழ்மக்களுக்கும் இருக்கிறது என்பதனை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதுமாத்திரமல்ல சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்கு போட்டாள் இனவாதத்தை தூண்டாது ஆனால் தமிழ் வேட்பாளருக்கு தமிழ் மக்கள் வாக்கு செலுத்தினாள் மட்டும் அது இனவாதத்தை தூண்டும் என்ற கருத்துப்பட பேசுவதும் நாகரீகமானதாக இல்லை.

    தமிழ் மக்கள் வாக்களிக்கும் ஒருவர் தோற்கம் நிலை ஏற்பட்டாள் வரக்கூடிய ஜனாதிபதி தமிழ் மக்களை ஏற்றுக் கொள்வாரா என்று கேட்பதானது அற்பத்தனமானது. என்று மேலும் தெரிவித்தார்.

    Leave A Comment