• Login / Register
  • செய்திகள்

    குடிநீா்த் தொட்டியில் மாட்டுச்சாணம்: கந்தா்வகோட்டையில் அதிா்ச்சி

    வேங்கைவயலில் குடிநீர்த்தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவண்டான் தெருவில் உள்ள மேல்நிலை குடிநீர்த்தேக்கதொட்டியிலேயே இவ்வாறு மாட்டு சாணம் கலக்கப்பட்டுள்ளது.

    இத் தொட்டியிலிருந்து ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த சுமாா் 150 வீடுகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், அண்மையில் அதேகாலனியில் வசிக்கும் கோபால் மகன் ரவிக்குமாா் என்பவா் உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

    இந்த நிலையில் நேற்று காலை(25) அந்த பகுதியில் குடிநீா் விநியோகம் செய்த போது குடிநீரில் மாட்டுச் சாணம் கலந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அதிா்ச்சி அடைந்த அப்பகுதி இளைஞா்கள் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் ஏறிப் பாா்த்தபோது மாட்டுச் சாணம் கிடந்துள்ளது. அவா்கள் இதுகுறித்து கந்தா்வகோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமிக்கு தகவல் கொடுத்தனா்.

    மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியவட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமி உள்ளிட்ட அதிகாரிகள்.
    அதன்பேரில் வட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் பெருமாள், கல்லாக்கோட்டை வருவாய் ஆய்வாளா் பிரியதா்ஷினி, கிராம நிா்வாக அலுவலா் சுபா ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து குடிநீா் தொட்டியை பாா்வையிட்டனா்.

    மேலும், குடிநீா்த் தொட்டியில் இருந்த மாட்டுச் சாணத்தை சேகரித்த அதிகாரிகள், அதனை ஆய்வுக்கு அனுப்பி மாட்டுச் சாணம் தானா என கண்டறியப்படும். அது உறுதி செய்யப்பட்டால் இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.



    Leave A Comment