• Login / Register
  • ஆன்மிகம்

    கச்சத்தீவு திருவிழாவிற்கு அழைப்பு: விண்ணப்ப இறுதி தேதி அறிவிப்பு

    கச்சத்தீவில் பிப்ரவரி 23, 24-ல் நடைபெற உள்ள அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ள  இந்திய பக்தர்கள் பிப்.6-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம், ராமேசுவரம் பங்குத் தந்தை சந்தியாகுவுக்கு அனுப்பியுள்ளார்.

    தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2024–ம் ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா பிப்.23 அன்று மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து திருப்பலிகள் நடைபெறும். தொடர்ந்து சிலுவைப் பாதை நிகழ்ச்சியும், இரவு தேர்ப் பவனியும் நடைபெறும்.

    பிப்.24-ம் தேதி காலை சிறப்பு பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெறும். பின்னர் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடையும். கச்சத்தீவுக்குப் பக்தர்களை ஏற்றிச்செல்லும் படகுகளின் உரிமையாளர்கள் ராமேசுவரம் சூசையப்பர் ஆலய வளாகத்தில் உள்ள கச்சத்தீவு திருப்பயண அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

    இந்த விண்ணப்பத்துடன் படகின் வாகனப் பதிவுப் புத்தகம் (ஆர்.சி), படகுக்கான காப்பீடு ஆவணம், படகு உரிமையாளரின் மார்பளவுப் புகைப்படம் ஆகியவற்றின் 3 நகல்களை இணைத்துப் பதிவுசெய்து கொள்ளவேண்டும். விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கச்சத்தீவு திருப்பயண அலுவலகத்தில் பிப்.6. மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள், படகுகளின் உரிமையாளர்கள் மூலம் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    Leave A Comment