“கோவிஷீல்டால் பக்கவிளைவுகள் ஏற்படும்": ஒப்புக்கொண்ட ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம்
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரிட்டன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கோவிஷீல்டு பாதிப்புகள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் சமர்ப்பித்த ஆவணத்தில், கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்களின் (பிளேட்லட்) அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதை அந்தச் செய்தி மேற்கோள் காட்டியுள்ளது.
பிரிட்டனில் மட்டும் ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதன் கோவிஷீல்டு தடுப்பூசியால் உயிரிழப்புகள், தீவிர பாதிப்புகள் ஏற்பட்டதாக 51 வழக்குகள் விசாரணையில் உள்ளன. 100 மில்லியன் பவுண்ட் அளவில் நிவாரணம் கோரி இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் முதல் புகார்தாரரான ஜேமி ஸ்காட் தரப்பில், “கடந்த ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு ஜேமிக்கு முதன்முதலில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் மூளையில் ரத்தம் உறைந்து நிரந்தர பாதிப்பு ஏற்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் தம் மீது முவைக்கப்பட்ட குற்றசாட்டை மறுத்து வாதிட்டு வந்தாலும் கூட நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஓர் ஆவணத்தில் மட்டும் கோவிஷீல்டு அரிதாக ரத்த உறைதல், ரத்த தட்டுக்கள் குறைதலை ( TTS - Thrombosis with Thrombocytopenia Syndrome) பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் இது ஏன் ஏற்படுகிறது என்பது தெரியவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஆஸ்ட்ராஜெனக்காவின் இந்த ஒப்புதலால் கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிக்கப்பட்டதாகக் கூறும் பலர் மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பெரிய அளவில் இழப்பீடு வழங்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
Leave A Comment