• Login / Register
 • ஆன்மிகம்

  மனநலத்திற்கு திருவிடைமருதூர்: திருத்தல சிறப்பு

  கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருவிடைமருதூர் திருக்கோவில்.

  சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் " மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத்தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக்கோயிலின் வெளிச்சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். 

  பாடல் பெற்ற தென்கரை சிவஸ்தலங்கள் வரிசையில் 30-வது தலமாக இருப்பது திருவிடைமருதூர். இது ஒரு சிறந்த பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலம். முன் பிறவியில் ஆலயத்தை இடித்தல், சாமி சிலையை திருடுதல் பொன்ற பாவச் செயல்களை செய்தவர்கள், இப்பிறவியில் அந்தணர் ஒருவரை கொல்லுதல், பெண்ணிடம் ஆசை காட்டி அவளை மணம் செய்துகொள்கிறேன் என்ற பொய் சொல்லி அவளுடன் கூடி இருந்துவிட்டு பின்பு அப்பெண்ணை ஏமாற்றுதல், அல்லது இதற்கு சமமான பாவங்களை செய்தாலோ, ஜாதக ரீதியாக ஒருவர் ஜாதகத்தில், சனி, குரு இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்திருந்தாலோ ஒருவருக்கு இந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது.இத்தகைய பிரம்மஹத்தி தோஷம் நீங்கி, நிவாரணம் பெறவும், உரிய பரிகாரம் செய்துகொள்ளவும் சிறந்த தலம் திருவிடைமருதூர்.

  இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் 5, திருஞானசம்பந்தர் பதிகம் 5, சுந்தரர் பதிகம் 1 என, மொத்தம் 11 பதிகங்கள் உள்ளன.

  இவ்வாலயம், தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை, வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில், அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்துகொண்டிருக்கும்போது வழியில், உறங்கிக்கொண்டிருந்த ஒரு அந்தணன், குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும், ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அத்துடன், அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது.  சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன், மதுரை சோமசுந்தரரை வணங்கி இவற்றில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரரும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த அரசனுக்கு, தன் நாட்டின் மீது சோழ மன்னன் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன், சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்தொடர்ந்து கோவிலுக்குள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன.

  ஆனால், திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள்புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பாண்டிய நாடு திரும்பினான். இதை நினைவுகூரும் வகையில், இன்றளவும் இவ்வாலயத்துக்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று, மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இன்றும் அக்கோயிலில் சிலையாக வீற்றிருக்கும் பிரம்மஹத்தியை, நாம் கிழக்கு கோபுர வாயில் உள்ளே நுழைந்தவுடன் முன் மண்டபத்தில் இடதுபுறம் ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பதைக் காணலாம். மன்னர் சென்ற வழியில் மீண்டும் திரும்பி வருவார். அவரை மீண்டும் பிடித்துக்கொள்ளலாம் என்று பிரம்மஹத்தி அமர்ந்துள்ளது என்பது ஐதீகம்.

  திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலம் வடமருதூர்; தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடை மருதூர். இவை இரண்டுக்கும் இடையே உள்ள இத்தலம் இடைமருதூர் என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணம் - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ளது திருவிடைமருதூர்.  நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் கொண்டு காட்சி அளிக்கும் இவ்வாலயம், மத்யார்ஜுனம் என்று வழங்கப்படுகிறது. மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புகளாலேயே ஒரு கோயில் பெருமை பெறுகின்றது. அந்தவகையில், இந்தத் திருவிடைமருதூர், இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புகள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும், நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால், இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. மேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்துக்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழிபாடுகளைச் செய்து, மேகராகக்குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களை பாராயணம் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.

  இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர், தன்னைத்தானே அர்ச்சித்துக்கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்குப் போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார். இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாசுரனை கொன்ற பாவம் நீங்க மூகாம்பிகை இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டாள். மூகாம்பிகை சந்நிதி அருகில் உள்ள மகாமேரு சந்நிதியில், பெளர்ணமியன்று மேருவுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் பட்டும் தனிச் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.  கோயில்கள் பலவற்றுள்ளும், இந்தக் கோயிலில்தான் மிகப்பெரிய எண்ணிக்கையில், அதாவது 32 தீர்த்தங்கள் உள்ளன என்பது வியக்கவைக்கும் செய்தி. இவற்றில், ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே, கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது. தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு.

  இப்புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும், சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்துபோனான். பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முக்தி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகிறது.

  பிரமஹத்தி தோஷம், மற்றும் பல தோஷங்களை தீர்க்கும் தலமாக விளங்கும் திருவிடைமருதூர் தலத்துக்குச் சென்று மஹாலிங்கேஸ்ரரை ஒருமுறை வழிபட்டு வாருங்கள். பிறப்பால் அந்தணனான ராவணனை வதம் செய்ததால் ஶ்ரீராமரும் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு அதனின்று விடுபட, தேவிபட்டிணத்தில் கடலில் நவக்கிகரகங்களை ஸ்தாபித்து வழிபட்டார் என்றால், இந்த தோஷத்தின் பாதிப்பு பற்றி புரிந்துகொள்ளலாம். நாமும் பிரம்மஹத்தி தோஷம் விலக திருவிடைமருதூர் சென்று பரிகாரங்கள் செய்து வாழ்க்கையில் நன்மை அடைவோம்.

  Leave A Comment