• Login / Register
  • மேலும்

    கோவிஷீல்டு சர்ச்சை: எல்லோருக்கும் ஆபத்து இல்லை - விஞ்ஞானி ராமன் விளக்கம்

    கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய எல்லோருக்கும் ஆபத்து இல்லை, 10 லட்சம் பேரில் ஏழு அல்லது எட்டு பேருக்குத்தான் அரிதான பக்கவிளைவாக ரத்தம் உறைதல் ஏற்படலாம் என்று இந்தியாவின் மிக முன்னணி தொற்றுநோயியல் நிபுணர், ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்காகேத்கர் தெரிவித்துள்ளார்.

    கொரோனாவை  தடுக்க நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘மிக அரிதான’ பக்கவிளைவாக ரத்தம் உறைதல் ஏற்படலாம் என்று லண்டன் உயா்நீதிமன்றத்தில் அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனகா ஒப்புக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

    ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி ராமன், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவருக்கும் ஆபத்து இல்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.

    ஒரே ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே அந்த அபாயம் இருந்ததாகவும், அதுவே இரண்டாவது தவணை செலுத்தும்போது அந்த அபாயம் குறைவதாகவும், மூன்றாவது தவணை செலுத்திக்கொண்டால் அந்த அபாயமும் குறைந்துவிடும் என்றும், பக்கவிளைவுகள் என்பது தடுப்பூசி செலுத்தி இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள்தான் நேரிடும் என்றும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

    மேலும், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் 10 லட்சம் பேரில் 7 அல்லது 8 பேருக்கு மட்டும்தான் இந்த அபாயம் இருப்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

    கொரோனா பரவலின்போது இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிதான் அதிகம் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 




    Leave A Comment