• Login / Register
  • சோதிடம்

    ராகு-கேது பெயர்ச்சி 2022; 12 ராசியினருக்குமான பலன்கள்!

    ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாகும் இந்த ராகு, கேது பெயர்ச்சி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கொடுக்கும்.

    2022 ஆம் வருடத்தில் வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் மாதம் 21ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்த ராகு பகவான் மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு கேது பகவானும் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்கள்.

    ராகு கேது பெயர்ச்சி சுப மற்றும் அசுப பலன்களை கொடுக்கக்கூடிய வகையில் 12 ராசிக்காரர்களுக்கும் இனி வரும் காலங்களில் என்னென்ன பலன்களைக் கொடுக்க இருக்கிறார்கள்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

    மேஷம்:

    ஒரு ராசியில் 18 மாத காலம் தங்கி இருக்கும் இந்த ராகு மற்றும் கேது பகவான் உங்கள் ராசிக்கு அடுத்து வரும் 18 மாதங்களுக்கு பொருளாதார ரீதியான உயர்வுகளை ஏற்படுத்த இருக்கிறார்கள். குழப்பமான மன நிலையில் இருந்து மீண்டு தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடிய தைரியத்தைக் கொடுக்க இருக்கிறார்கள். சில சமயங்களில் ராகு பகவான் உங்களை குறுக்கு வழியில் சிந்திக்க செய்தாலும் நீங்கள் நேர்மையாக நடந்து கொள்வது நல்லது. இந்த ராகு கேது பெயர்ச்சியால் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும் யோகமுண்டு. தொழில் மாற்றம், இடமாற்றம் போன்றவை ஏற்படும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.

    ரிஷபம்:

    ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி குடும்பத்தில் மகிழ்ச்சியை கொடுக்க இருக்கிறது. மன உளைச்சலில் இருந்து விடுபட இருக்கிறீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள், இருப்பினும் ராகு அமர்ந்து இருக்கும் இடம் உங்கள் ராசிக்கு சரியாக இல்லாமல் இருப்பதால் உங்களிடம் உண்மை தன்மை இல்லை எனில் அதுவே பிரிவை நோக்கி பயணிக்க செய்யும், எனவே கவனமுடன் இருப்பது நல்லது. எதையும் ஒளிவு மறைவில்லாமல் நேர்மையாக நடந்து கொண்டால் குடும்ப வாழ்வில் சிக்கல் இல்லாமல் செல்லும்.

    மிதுனம்:

    மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்கும். சனி பகவான் கொடுத்துக் கொண்டிருந்த பாதிப்புகளில் இருந்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு தடையில்லாத வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். சுய ஜாதகத்தின் படி உங்கள் ராசிக்கு ராகு கேது அமர்ந்திருக்கும் நிலை உங்களை உயர்வடைய செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

    கடகம்:

    கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி காரிய வெற்றியை கொடுக்கும் அற்புதமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மனதில் நிம்மதி அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பதால் நீங்கள் எதிர்பார்ப்பதை விட உயர்ந்த இடத்திற்கு செல்லலாம். வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் நல்ல வேலை அமைந்து செட்டில் ஆகிவிடுவார்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் பரஸ்பர அன்பு அதிகரிக்கும், இதனால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

    சிம்மம்:

    சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி பாக்கிய ஸ்தானத்தில் பயணிக்க இருப்பதால் எதிர்பாராத திருப்பங்களும், மாற்றங்களும் நிகழும். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதே தெரியாமல் சுவாரசியமான திருப்பங்களுடன் கூடிய வெற்றி கிடைக்க இருக்கிறது. தடைப்பட்டுக் கொண்டிருந்த மங்கள நிகழ்வுகள் மீண்டும் குடும்பத்தில் மகிழ்ச்சியை கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்கள் பங்குக்கு நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி வெற்றி வாய்ப்புகள் உண்டாகும்.

    கன்னி:

    கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி பல மாற்றங்களை கொடுக்க இருக்கிறது. இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்ற மாற்றங்கள் சிலருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் சூழ்நிலை ஏற்படலாம். பொருளாதார ரீதியான ஏற்றம் இருப்பதால் வரவுக்கு உரிய செலவு சரியாக இருக்கும், சேமிப்பும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற நபர்களின் அறிமுகத்தை கூடுமானவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். முன்பின் தெரியாதவர்கள் மூலம் குடும்பத்தில் தேவையில்லாத சிக்கல்கள், கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை.

    துலாம்:

    துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி பல எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்யும். தேவையற்ற ஆசைகளை மனதில் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. களத்திர ஸ்தானத்தில் ராகு பயணிக்க இருப்பதால் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படலாம். கணவன்-மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. தேவையற்ற சிந்தனைகள் உங்களை பல உறவுகளிடம் இருந்து விலகி செல்ல செய்யும் என்பதால் எண்ணும் எண்ணத்தில் கவனம் தேவை.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி சனி பகவான் கொடுத்து வந்த கஷ்டங்களில் இருந்து விடுதலை கொடுக்க கூடிய பெயர்ச்சியாக இருக்கப் போகிறது. நினைத்ததை விட நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய இந்த பெயர்ச்சி உங்களுக்கு உற்சாகத்தை அள்ளி கொடுக்க இருக்கிறது. மனதில் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த இறுக்கம் தளர்ந்து நிம்மதி பெருமூச்சு அடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த கொடுக்கல், வாங்கல் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்க்கும் நல்ல வேலை பட்டதாரிகளுக்கு அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றில் சாதக பலன் உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையும். பெண்களுக்கு மனோதிடம் அதிகரிக்கும்.

    தனுசு:

    தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்க இருக்கிறது. பண ரீதியான பல தடைகளை உடைத்தெறிந்து இலாபத்தை அதிகரிக்க செய்யும், இந்த பெயர்ச்சி உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்க இருக்கிறது. சுயதொழில் புரிபவர்களுக்கு மந்த நிலை நீங்கி வியாபாரம் சூடுபிடிக்க துவங்கும். பிள்ளைகள் கொடுத்து வந்த தொல்லைகள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை மேலோங்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை குறையும். சக போட்டியாளர்களை சமாளித்து வெற்றி பெறப் போகிறீர்கள். திருமணமாகாதவர்கள் காதல் வசப்பட வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் என்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன் மனைவி உறவில் அற்புதம் நிகழும். வரவுக்குள் செலவை கட்டுப்படுத்துவது நல்லது. புதிய முயற்சிகளில் லாபம் காணலாம்.

    மகரம்:

    மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு இருந்து வந்த தடைகளை தகர்த்து எறிய செய்து தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தாய்வழி உறவினர்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வு தேவை. தேவையற்ற இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் காணலாம். வெளியூர் மற்றும் வெளி நாட்டுடன் தொடர்புடைய தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தை விட்டு பிரியும் சூழ்நிலை ஏற்படலாம். இட மாற்றம் குறித்த விஷயங்களில் எச்சரிக்கை தேவை. கடன் தொல்லையிலிருந்து விடுபட இருக்கிறீர்கள். உங்களை சுற்றி இருந்த எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி காணலாம்.

    கும்பம்:

    கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மூலம் துணிச்சலான செயல்களை செய்ய இருக்கிறது. சனி பகவான் கொடுத்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு லாபம் காண கூடிய வாய்ப்புகளை கொடுக்க இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் வழி பிரச்சினைகள் எளிதாக தீர்வுக்கு வரும். உங்களை மட்டமாக நினைத்தவர்கள் முன்னிலையில் நீங்கள் உயர்ந்த இடத்திற்கு சென்று காண்பிக்க இருக்கிறீர்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் கொடுக்கும் என்பதால் தளராத முயற்சி செய்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைத்து, உங்கள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

    மீனம்:

    மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி எதையும் நிதானமாக கையாள சொல்லிக் கொடுக்க இருக்கிறது. எந்த ஒரு செயலையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வது நல்லதல்ல. குடும்பத்தில் தேவையற்ற சண்டை, சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் கொடுத்துக் கொண்டிருந்த தொல்லைகளில் இருந்து விடுபடும் வாய்ப்புகள் உண்டு. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று எவருடைய பிரச்சினையிலும் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத திடீர் யோகம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். தேவையற்ற வாக்குறுதிகளை தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிவிடக் கூடும் என்பதால் விழிப்புணர்வு தேவை.

    Leave A Comment