• Login / Register
  • செய்திகள்

    உடல் நல குறைபாடு : பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உடல் நல குறைபாடு காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆதிமாதையனூர் கிராமத்தில் புகுந்த பெண் யானை வாய் பகுதியில் காயம் பட்டுள்ளதும், அதனால் அந்த  யானையால் உணவு உட்கொள்ள முடியாமல் தவித்ததும் தெரியவந்தது.

    இந்தநிலையில், ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுத்தி முகாமில் இருந்து சின்னத்தம்பி என்ற  கும்கி யானையை வரவழைத்து அதன் உதவியோடு காயமடைந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    யானைக்கு உணவு உட்கொள்ளும் வாய், நாக்கு பகுதியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனால், உணவு உட்கொள்ள முடியாமல் தவித்து வந்த 15 வயதுமிக்க அந்த பெண் காட்டு யானை டாப்ஸ்லிப் அருகே உள்ள  வரகளியார் வனத்துறை யானைகள் பயிற்சி மையத்திற்கு கடந்த 17-ம் தேதி இரவு கொண்டு வரப்பட்டது. அங்கு கிரால் எனப்படும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டு, இரண்டு தினங்களாக  வன கால்நடை மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்தநிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அந்த  யானை உயிரிழந்ததாக  வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    Leave A Comment