• Login / Register
  • செய்திகள்

    ஹர்திக் படேல் பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறாரா?

    குஜராத்தில் படிதார் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஹர்திக் படேல் தலைமையில் கடந்த 2015ஆம் போராட்டங்கள் நடைபெற்றன.

    இந்த போராட்டங்கள் மூலம், குஜராத்தில் படிதார் சமூகத்தின் சக்திவாய்ந்த நபராக ஹர்திக் படேல் கருத்தப்பட்டார். 

    இதனையடுத்து இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இணைந்தார். இவருக்கு, குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.

    இந்தநிலையில், குஜராத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் உயர்மட்ட தலைவர்களால், தான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக ஹர்திக் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

    மேலும், ‘பாரதிய ஜனதா கட்சியை பற்றி சில நல்ல விசயங்கள் உள்ளன அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்’  என கருத்துகளைத் தெரிவித்தார்.

    இந்த நிலையில், ஹர்திக் படேல் தனது டிவிட்டரில், அவரின் பெயருடன் இருந்த காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் என்ற தலைப்பை நேற்று நீக்கினார்.

    கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள், டிவிட்டரில் செய்த நடவடிக்கைகளை போலவே ஹர்திக் படேலும் செய்துள்ளதால் அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் ஹர்திக் படேல், இணையப் போவதாக தகவல்கள் வந்த நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் நம்பப்படுகிறது.

    குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதுவும் படிதார் சமூகத்தினரின் ஓட்டுகள் அதிகம் உள்ள குஜராத்தில், ஹர்திக் படேல் போன்ற ஒருவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது


    Leave A Comment