• Login / Register
  • செய்திகள்

    ‘திருமணவிழாவில் பங்கேற்பது குற்றமாங்க?’ –பா.ஜ.க.வுக்கு காங். பதிலடி

    ராகுல் காந்தி நேபாளத்தில் உள்ள நைட்கிளப்பில் இருப்பதுபோன்ற காணொலி சமூக ஊடகங்களில் இன்று வைரலாகி வருகிறது. பாரதிய ஜனதாவினர் இந்த காணொலியை பதிவிட்டு ராகுல் காந்தியை விமர்சித்து வருகிறார்கள்.

    பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரும் பிகார் மாநில அமைச்சருமான சையத் ஷானவாஸ் உசைன், ‘ராகுல் காந்தி கட்சியை வளர்ப்பதை விட விருந்துகளில் பங்கேற்பதில்தான் பிசியாக இருக்கிறார். நாம் பார்ட்டியை (கட்சியை) வளர்க்கப் பாடுபடுகிறோம். ராகுல் பார்ட்டிகளில் பங்கேற்க பாடுபடுகிறார்’ என கிண்டல் செய்துள்ளார்.

    இந்நிலையில் ராகுல்காந்தி திருமண விழா ஒன்றில் பங்கேற்க 3 பேர்களுடன் நேபாளத்துக்குச் சென்றதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ராகுல் அவரது நண்பரான சும்னிமா உதாசின் திருமணத்தில் பங்கேற்பதற்காக நேபாளம் வந்திருப்பதாக காட்மண்டு போஸ்ட் நாளிதழ் செய்தி  வெளியிட்டுள்ளது.

    சும்னிமா உதாஸ் முன்னர் சி.என்.என். தொலைக்காட்சியில் ஊழியராகப் பணிபுரிந்தவர், தற்போது அவர் லும்பினி அருங்காட்சியகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்தநிலையில் ராகுல் பற்றி பா.ஜ.க பரப்பிய பதிவுகளுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அந்தக் கட்சியின் மாணிக்கம் தாகூர் , ‘திருமண வரவேற்பில் பங்கேற்பது குற்றமா? இதைக் கண்டு சங்கிகள் ஏன் பயப்படுகிறார்கள்? சங்கிகள் ஏன் பொய் பரப்புகிறார்கள்? எல்லோருமே பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம்தானே?’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ‘ராகுல் காந்தி நட்பு நாடு ஒன்றில் நண்பரின் திருமணத்துக்காகத்தான் சென்றிருக்கிறார். 2015ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்  ஷெரிப்பீன் மகள் திருமணத்தில் மோடி திடீரென போய் கலந்து கொண்டதைப் போல ராகுல் செல்லவில்லை’ என்று தெரிவித்திருக்கிறார்.

    ‘ராகுல் காந்தி, ஊடகவியலாளர் ஒருவரது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நட்புநாட்டுக்குச் சென்றிருப்பது ஒன்றும் தண்டனைக்குரியகுற்றமல்ல’ என்றும் அவர் கூறியிருக்கிறார்.

    Leave A Comment