• Login / Register
  • செய்திகள்

    எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு : சீதாராம் யெச்சூரி எதிர்ப்பு

    குடியரசுத்தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. குடியரசுத்தலைவர் தேர்தல்  தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா, தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் வரும் 15ஆம்தேதி டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

    இந்தநிலையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சிறப்புக் கூட்டம் ஒன்றுக்கு மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித்தலைவருமான மம்தா பானர்ஜி 22 தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜூன் 15ஆம்தேதி டெல்லியில் இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ள 22 தலைவர்களில் சோனியா காந்தி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, முதல்வர்கள் உத்தவி தாக்கரே, பினராயி விஜயன், நவீன் பட்நாயக், கே.சந்திரசேகரராவ், மு.க.ஸ்டாலின் போன்றவர்களும் அடங்குவார்கள்.

    காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தலைமையில், டெல்லியில் வரும் 15ஆம்தேதி எதிர்க்கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் மம்தா அதே நாளில் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதற்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    ‘மம்தாவின் ஒருதலைப்பட்சமான முயற்சி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பாதிக்கும். மம்தாவின் இந்த அழைப்பு வழக்கத்துக்கு மாறானது. அதிக எண்ணிக்கையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதே நமது நோக்கம்’ என சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

    Leave A Comment