• Login / Register
  • செய்திகள்

    சுட்டெரிக்கும் வெயில்: கடைபிடிக்க வேண்டிய விடையங்கள் என்ன?

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்துவரும் நிலையில், வெயிலின் தாக்கத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வெப்ப அலை வீசுவதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

    அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய வானிலை மையத்தின் அறிக்கைப்படி தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். செய்ய வேண்டியவை: உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தாகம் இல்லாவிட்டாலும், முடிந்தவரை போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

    தாகம் நீரிழப்பின் நல்ல குறியீடு அல்ல. பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓஆர்எஸ் மற்றும் எலுமிச்சை கலந்த தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறுகள் போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை சிறிது உப்பு சேர்த்து உட்கொள்ள வேண்டும். முலாம்பழம், கஸ்தூரி முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி,வௌ்ளரி அல்லது உள்நாட்டில் கிடைக்கும் பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அதிக நீர்ச்சத்து கொண்ட பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும்.

    உடலை முழுமையாக மறைக்கும் உடைகளை அணிய வேண்டும். வெளிர் நிறங்களில் மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. தலையை மூடிக் கொள்ள வேண்டும். சூரிய ஒளி நேரடியாக வெளிப்படும் போது குடை, தொப்பி, துண்டு மற்றும் பிற பராம்பரிய தலையை மூடும்பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

    வெயிலில் வெளியே செல்லும் போது காலணிகளை அணியுங்கள். முடிந்த வரை வீட்டுக்குள்ளேயே இருங்கள். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருங்கள். வெளியில் செல்வதாக இருந்தால், உங்கள் வெளிப்புறச் செயல்பாடுகளை நாளின் குளிர்ச்சியான நேரங்களுக்குள் மேற்கொள்ளுங்கள் அதாவது காலை மற்றும் மாலை நேரங்களில் மேற்கொள்ளுங்கள்.

    செய்யக் கூடாதவை: நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவும். குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை.வெளியில் செல்லும்போது கடினமான செயல்களை தவிர்க்க வேண்டும். வெறுங்காலுடன் வெளியே செல்லக் கூடாது. நண்பகலில் சமைப்பதைத் தவிர்ப்பதுடன் சமையல் செய்யும் இடத்தில் போதிய அளவு காற்றோட்டம் இருக்குமாறு கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும்.

    ஆல்கஹால், தேநீர், காபி மற்றும் புட்டிகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் அல்லது அதிக அளவு சர்க்கரை கொண்ட பானங்கள் ஆகியவற்றை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். இவற்றை உண்ணும்போது, அதிக உடல் திரவத்தை இழக்க வழிவகுக்கும். அல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தலாம். புரதச்சத்து அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். பழைய உணவுகளை உண்ண வேண்டாம். நீண்ட நேரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ விடாதீர்கள். வாகனத்தின் உள்ளே வெப்ப நிலை ஆபத்தானதாக இருக்கலாம்.

    கடுமையான கோடை வெயிலின் பாதிப்புகளை எதிர் கொள்வதற்காக அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனி படுக்கைகள் ஒதுக்கப்பட்டு இதற்கான சிகிச்சை அளிப்பதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஓஆர்எஸ் கரைசல் கொடுப்பதற்கு தனியே இடம் ( ஓஆர்எஸ் கார்னர் ) அமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. எனவே, பொது மக்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றி கோடை வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    Leave A Comment