• Login / Register
  • செய்திகள்

    ரூ.600-க்கு பதிலாக ரூ.25000: வழக்குரைஞர் பதிவு கட்டணம் தொடர்பில் அதிரடி உத்தரவு

    நாடு முழுவதும் வழக்குரைஞர் பதிவு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    ‘நாடு முழுவதும் சட்டப் படிப்பை முடித்து வழக்குரைஞராக பதிவு செய்பவா்களிடம் கட்டணமாக ரூ.600-க்கு மேல் வசூலிக்கப்படக் கூடாது’ என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அந்த வழக்கில் தீா்ப்பை ஒத்திவைத்தது.

    வழக்குரைஞராக பதிவு செய்வதற்கான கட்டணத்தை இந்திய வழக்குரைஞா்கள் சங்கமும் (பிசிஐ) சில மாநில வழக்குரைஞா் சங்கங்களும் சட்ட நடைமுறைகளை மீறி பன்மடங்காக உயா்த்தியுள்ளன. 

    இதை ரத்து செய்து, உரிய கட்டணத்தை வசூலிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    அதில், ‘வழக்குரைஞா் பணிக்கு பதிவு செய்ய ஒடிஸாவில் ரூ.42,100, குஜராத்தில் ரூ. 25,000, உத்தரகண்டில் ரூ.23,650, ஜாா்க்கண்டில் ரூ.21,460, கேரளத்தில் ரூ.20,050 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் நேற்று(23) விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ஆஜரான பிசிஐ தலைவா், ‘பிசிஐ தரப்பில் வழக்குரைஞா் பதிவு கட்டணமாக ரூ.15,000 வசூலிக்கப்படுகிறது. பிகாரில் ரூ. 25,000 வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் அல்லது சிறுநீரக பாதிப்புகளுக்கு உள்ளாகும் வழக்குரைஞா்களுக்கு மருத்துவ நிதியுதவி அளிக்கப்படுகிறது’ என்றாா்.

    இதைக் கேட்ட நீதிபதிகள், ‘வழக்குரைஞா் சட்டம் 1961, பிரிவு 24-இன் படி, வழக்குரைஞராக பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 600-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவுக் கட்டணத்தை உயா்த்துவதற்கு நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே, ரூ. 600-க்கும் மேல் பதிவுக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது’ என்று குறிப்பிட்டு, தீா்ப்பை ஒத்திவைத்தனா்.




    Leave A Comment