• Login / Register
  • செய்திகள்

    ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை: நயினார் நாகேந்திரன்

    “தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்துக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை ” என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    மேலும், கைதானவர்கள் 3 பேர் மட்டுமல்ல, இதில் தொடர்புடைய நிறைய பேர் எனக்குத் தெரிந்தவர்கள், எனது சொந்தக்காரர்கள் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு இன்று (ஏப்.25) தாம்பரம் போலீஸார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “மே 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் கொடுத்துள்ளனர். முழுக்க முழுக்க என்னை குறிவைத்து செயல்படுகின்றனர். இதனை அரசியல் சூழ்ச்சியாகவே பார்க்கிறேன். தமிழகத்தில் ரூ.200 கோடிக்கு மேல் கைப்பற்றியுள்ளார்கள். ஆனால், ரூ.4 கோடியை யாரோ எங்கோ கொண்டு சென்றதில் எனது பெயரையும் சேர்த்து சூழ்ச்சி செய்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்திலேயே சொல்லிவிட்டேன். இது என்னுடைய பணம் அல்ல. அந்தப் பணத்துக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கைதானவர்கள் 3 பேர் மட்டுமல்ல, இதில் தொடர்புடைய நிறைய பேர் எனக்கு தெரிந்தவர்கள், எனது சொந்தக்காரர்கள் தான்.

    யாரையும் இதில் குறை சொல்ல விரும்பவில்லை. காவல்துறை தன் கடமையை செய்கிறது. அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. சட்டத்தை நாம் மதிக்க வேண்டும். வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். வழக்கமாக காவல்துறை மிரட்டி வாக்குமூலம் வாங்கும். விசாரணைக்கு ஆஜரான பிறகே என்ன வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள் என்பது தெரியும்.

    யார் மீதும் அவதூறு வழக்கு தொடரப்போவதில்லை. இந்த வழக்கில் என்னை சிக்க வைக்க முடியாது. இந்த வழக்கால் எனக்கு விளம்பரம் தான் கிடைத்து வருகிறது.

    யாரும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி பாதையில் பாஜக சென்று கொண்டிருக்கிறது. நிறைய இடங்களில் பாஜக வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போது வெளிமாநிலங்களுக்கு பிரச்சாரம் செல்லவுள்ளேன். எனவே, கூடிய விரைவில் சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.


    Leave A Comment