• Login / Register
  • செய்திகள்

    பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒப்புதல் - மத்திய அரசின் குழுவுக்கும் பரிந்துரை!

    சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க பல்வேறு தரப்பினர் கடுமையான எதிர்ப்பினை வெளனிப்படுத்தி வரும் நிலையில் அதனை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதுடன் மத்திய அரசின் குழுவுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது.

    இந்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன் ஆகியோர் தலைமையில் கடந்த ஜனவரி 31-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர்.

    நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தரப்பினர் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்திருந்த நிலையில் குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

    இந்நிலையில், இதில் 22 பேர் ஆதரவும், 12 பேர் எதிர்ப்பும் தெரிவித்ததாக கூட்ட நிகழ்வுகள் தொடர்பான குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து, கருத்து கேட்பு கூட்டம் மற்றும் பொதுப்பணித்துறை தயாரித்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பரிசீலித்த, தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    மேலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    இதேவேளை, மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் வைத்தால் நிச்சயம் உடைபேன் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நேற்றைய தினம் மீண்டும் தெரிவித்துள்ளார்.

    இந்திய கடலோடிகள் நல அமைப்பு (ISWO – Indian Seafarers Welfare Organization) சார்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 'சுற்றுச்சுழல் பாதுகாவலர்' விருது வழங்கி கௌரவிக்கப்ப்பட்டது.

    இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், திருவள்ளுவருக்கும் சிலை கடலில் உள்ளதே என்கிறார்கள். இயற்கை பாறை வேறு செயற்கையாக உருவாக்கும் பாறை வேறு. செயற்கையாக உருவாக்கும் பாறைகளால் பல லட்சம் கடல் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும்.

    இப்போதும் சொல்கிறேன் கடலில் பேனா வைத்தால் நிச்சயம் உடைப்பேன் என பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment