• Login / Register
  • செய்திகள்

    மாநிலங்களவைத் தேர்தல்- நிர்மலா சீதாராமன் வேட்புமனு தாக்கல்

    மாநிலங்களவையில் 57 எம்.பி.க்.கள் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதனையடுத்து, தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் வரும் ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி, கா்நாடகாவில் மாநிலங்களவை உறுப்பினர்களில் 4 இடங்கள் காலியாக இருக்கின்றது.

    கர்நாடகத்தில் சட்டசபையில் உள்ள பலத்தின் அடிப்படையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு 2 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

    இந்த நிலையில் நான்காவது இடத்தில் வெற்றி பெற எந்த கட்சியிடமும் போதுமான வாக்குகள் இல்லை. இதனால் அந்த இடத்திற்கு இழுபறி நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 2 இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் மேலிடம் நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    இந்த அறிவிப்பில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் இன்று தாக்கல் செய்தார். அப்போது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உடனிருந்தனர்.

    இதனிடையே, நிர்மலா சீதாராமன் 2ஆவது முறையாக கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment