• Login / Register
  • செய்திகள்

    காலிமுகத்திடலில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

    கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்களை நள்ளிரவில் இராணுவத்தினரை கொண்டு தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ள சம்பவத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இலங்கையின் புதிய அரசாங்கம் அதன் ஜிஎஸ்பி GSP+ உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கிச் செயற்படும் என தாம் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (22) கடுமையான அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

    அந்த அறிக்கையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை தேர்வு செய்ய இலங்கை நாடாளுமன்றம் துரித நடவடிக்கை எடுத்ததை போன்று, ஜனநாயக, அமைதியான மற்றும் ஒழுங்கான மாற்றத்தின் செயல்பாட்டில் உள்ள இலங்கை குடிமக்களின் எண்ணம், கருத்து சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட உரிமைகளை நிலைநிறுத்துவதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக் காட்டியுள்ளது.

    போராட்டக்காரர்கள் மீது தேவையில்லாத வன்முறைகள் நடப்பதாக முறைப்பாடுகள் எழுந்துள்ள நிலையில், அமைதியான ஒன்றுகூடல் மற்றும் சங்கத்தின் சுதந்திரத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தும் அதேவேளை, அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தேவையற்ற பலப்பிரயோகத்தை வன்மையாக கண்டித்துள்ளது.

    நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நிலையான பாதையில் கொண்டு செல்வதற்கு, உள்நாட்டுச் சூழ்நிலையின் அவசரத் தேவைக்கு, சீர்திருத்தங்களின் கட்டமைக்கப்பட்ட திட்டத்தை விரைவாக நிறுவி செயல்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

    இச்சூழலில், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது இன்றியமையாதது என்றும் சிறந்த பண்புகளுடனான நிர்வாகத்தை வளர்ப்பது மற்றும் நல்லிணக்க முயற்சிகளை மேம்படுத்துதல் அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

    மேலும் ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்சி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட இலங்கை மக்களுக்கு ஆதரவான அனைத்து முயற்சிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவளிக்கும்.

    பல ஆண்டுகளாக, ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் இலங்கை மக்களுக்கு ஒரு பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளன.

    ஜிஎஸ்பி GSP+ திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒற்றைச் சந்தைக்கான முன்னுரிமை சலுகையை 2017 இல் மீண்டும் அறிமுகப்படுத்தியமை இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது.

    எனவே, புதிய அரசாங்கம் அதன் GSP+ உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கிச் செயல்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கிறது.

    தற்போதைய மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு திட்டங்கள் (EUR 70 மில்லியன்) இலங்கையின் மிக முக்கியமான தேவைகளுடன் சீரமைக்கப்படுகின்றன.

    இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு சிவில் பாதுகாப்பு பொறிமுறையின் மூலம் மருந்துகளை வழங்குவதுடன், மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக, உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையின் உணவுப் பாதுகாப்பை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment