• Login / Register
  • செய்திகள்

    பிளஸ்2 தேர்வெழுதாத 50,000 மாணவர்கள்; அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

    50,000 மாணவர்கள் +2 தேர்வு எழுதவில்லை என்றவிடையம் தொடர்பில் சட்டப்பேரவையில்  எழுப்பப்பட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

    இம்முறை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுத வராதது குறித்து பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

    இதுவரை இல்லாத அளவிற்கு 50,000 பேர் +2 தேர்வு எழுதவில்லை இதற்கு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, காங் உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் வலியுறுத்தினர். 

    இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வது மட்டும் என்னுடைய கடமை அல்ல. இத்தனை மாணவர்கள் ஏன் வரவில்லை என முதலில் கவனத்தை ஈர்த்தது தமிழ்நாடு முதலமைச்சர் தான். பல்வேறு சலுகைகளை பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கியுள்ளோம். அப்படி இருக்கும்போது இந்த மாணவர்கள் எங்கே சென்றார்கள் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

    2020- 21 ஆம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த அனைத்து மாணவர்களும் கொரோனா தொற்று காரணமாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்கள். தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையில் அன்று ஆல்-பாஸ் என அறிவிக்கப்பட்ட மாணவர்கள் தான் இன்று ப்ளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்கள். அதன் தொடர்ச்சியாக அவர்கள் 2021-22 ல் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் 8,85,051 மாணவர்கள் பதிவு செய்து அதில் 41,306 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்று பதிலளித்தார்.

    Leave A Comment