பழனி முருகன் கோவில் விசாக திருவிழா; 27-ந்தேதி ஆரம்பம்
முருகப்பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாக திருநாள் முருக வழிபாட்டுக்கு சிறந்த நாளாகும், பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலையில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி காலையில் தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளியால் ஆன காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
விழாவின் 6-ம் நாளான ஜூன் 1-ந்தேதி இரவு 7.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், பின்னர் வெள்ளி மயில் வாகனத்தில் திருவுலாவும் நடைபெறுகிறது. 7-ம் நாளான ஜூன் 2-ந்தேதி வைகாசி விசாக தினத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில், முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 10-ந்தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
Leave A Comment