சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!
நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (ஆகஸ்ட்-12) திங்கட்கிழமை மாலை நடை திறக்கப்படவுள்ளது.
கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம்.
நாட்டில் விவசாயம் செழித்து, வறுமை நீங்குவதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நாளை (ஆகஸ்ட்-13) நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட்-12) மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. கோயில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்துவைக்கிறார்.
நாளை (ஆகஸ்ட்-12) அதிகாலை 5.45 மணி முதல் 6.30 மணி வரை நிறை புத்தரிசி பூஜை நடைபெறவுள்ளது.
இதற்காக பாலக்காடு மற்றும் அச்சன்கோவில் ஆகிய இடங்களில் இருந்து புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் கொண்டு வரப்பட்டு, பூஜை செய்யப்பட உள்ளது. பின்னர் அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்குப் பின்னர் நாளை இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.
மீண்டும் ஆவணி மாத பூஜைகளுக்காக வரும் 16 ஆம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave A Comment