ஆடி மாத சிறப்புகள்; அம்பிகை வழிபாட்டின் மூலம் சக்தி அருள் கிட்டும்!
அம்மனுக்கு உகந்த மாதமாக சொல்லப்படும் ஆடி மாத்தில் பெண் தெய்வ வழிப்பாட்டின் மூலம் சக்தி அருள் பெற்று ஒளிமயமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.
ஆடி மாதம் துவங்கும் காலத்தில் சூரியன் வட திசையில் இருந்து தென் திசை நோக்கி செல்ல துவங்கும். இது தேவர்களுக்கான இரவு காலமாகும்.
நம் இல்லங்களில் மாலையில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவது போலவே தேவர்களும் அந்த நேரத்தில் அம்பிகையை வழிபடுவார்கள் என நம்பப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு விதமான விசேஷங்கள் இருக்கும். அப்படி பார்க்கும் பொழுது ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்கிறது.
சூரியன் கடக ராசியில் பிரவேசிக்கும் நாள் ஆடி மாதம் துவங்குகிறது. ஆடி மாதம் முழுவதுமே சந்திரனின் ராசியான கடகத்தில் சூரியன் சஞ்சரிப்பார்.
சூரியனின் அதிதேவதை சிவபெருமான் மற்றும் சந்திரனின் அதிதேவதை அம்பிகை.
ஈசனே அம்பிகையின் இல்லத்தை நாடி சென்று, தன்னை விட்டு பிரிந்த சக்தியோடு சிவம் இணையும் காலம்தான் ஆடி மாதமாகும்.
தேவர்களுக்கு இரவு காலம் தொடங்கி விட்டால் மனிதர்களுக்கு யார் பாதுகாப்பாக இருப்பது என்ற கேள்விக்கு ஆடி மாத துவக்கத்திலிருந்து மார்கழி மாதம் முடியும் வரை, நம்முடைய முன்னோர்களை பூமிக்கு வந்து நம்மை காத்தருள்வார்கள்.
இதனால் தான் ஆடி மாத அமாவாசை மிக மிக முக்கியமானது.
குலதெய்வ வழிபாட்டுக்கு நிகரானது பித்ருக்களுக்கு செய்யக்கூடிய தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம்.
ஒரு வகையில், நம்முடைய முன்னோர்கள் தான் குல தெய்வமாகவும் வணங்கப்படுகிறார்கள். இது நாள் வரை உங்கள் குடும்பத்தில் பித்ருகளுக்கான நீத்தார் கடனை முறையாக செய்யாமல் இருந்தாலும் அல்லது ஏதேனும் விடுபட்டிருந்தாலோ ஆடி அமாவாசை அன்று அதை முறையாக செய்து, தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தர்ப்பணம் செய்வதன் மூலம் பித்ரு தோஷத்தையும் சாபத்தையும் போக்கலாம்.
ஆடி மாதத்தில் பூமிக்கு வரும் பித்ரு தெய்வங்கள் திருப்தி அடைந்தால் குடும்பத்தில் இருக்கும் பித்ரு தோஷம், குழந்தை பேறு இல்லாத தோஷம், உள்ளிட்டவை நீங்கும் என்பது நம்பிக்கை.
உலகையே காத்து ரட்சிக்கும் அம்பிகையின் பாதங்களில் மனிதர்கள் தஞ்சமடையும் மாதம்தான் ஆடி மாதம். கோடை காலம் முடிந்து சீதோஷ்ண நிலை மாறும் காலத்தில் பருவ கால நோய்கள், தொற்றுகள் ஏற்படாமல் இருக்க, உடல் ஆரோக்கியம் வலுவாக, ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு விழா எடுத்து கூழ்வார்த்து, வேப்பிலை தோரணம் கட்டி கொண்டாடுகிறோம்.
அப்படிப்பட்ட மாதம் அம்மன் ஆலயங்களில் திருவிழாக்களும், கூழ்வார்க்கும் வைபவங்களும், பூக்குழி இறங்குதல் போன்ற பல விசேஷங்கள் நடைபெறும்.
அப்படி விசேஷம் நிறைந்த இந்த ஆடி மாதத்தில் நாம் மறவாமல் வழிப்பட வேண்டிய சில தினங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
அம்மனுக்கு உகந்த மாதமாக கருதக்கூடிய ஆடி மாதத்தில் நாம் அன்றாடம் நம்முடைய வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக குலதெய்வ வழிபாடு என்பதும் மிகவும் விஷேசகரமான வழிபாடாக திகழ்கிறது.
இப்படி குலதெய்வ வழிபாட்டை அனுதினமும் செய்வதோடு மட்டுமல்லாமல் அம்மனையும் நாம் வழிபடுவதோடு மட்டுமல்லாமல் இன்னும் சில தினங்கள் இருக்கிறது.
இந்த தினங்கள் ஆடி மாதத்திற்கு மிகவும் விஷேசகரமான தினங்களாக கருதப்படுகிறது.
அந்த தினம் தான் ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வியாழன்.
இந்த மாதத்தில் வரக்கூடிய வியாழன், வெள்ளி மற்றும் செவ்வாய் இந்த மூன்று கிழமையும் மறவாமல் நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பல அற்புதமான நிகழ்வுகள் நடைபெறுவதை நம்மால் உணர முடியும்.
ஆடி வெள்ளியன்று வீட்டில் இருக்கக்கூடிய அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு.
இதே போல் ஆடி செவ்வாயும் அம்மனுக்கு மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. மேலும் அன்றைய தினம் முருக வழிபாடு செய்வதும் அற்புதமான பலனை தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது.
இதோடு மட்டுமல்லாமல் ஆடி வியாழக்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய குரு பகவானை நாம் வழிபாடு செய்தோம் என்றால் அந்த வருடம் முழுவதும் நமக்கு குருபகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் அன்றைய தினம் குரு பகவானுக்கு உகந்த எலுமிச்சை சாதத்தை தானம் செய்வதன் மூலம் பல அற்புதமான மாற்றங்களை நம்மால் பெற முடியும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும். சுப காரிய நிகழ்வுகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாக்கும்.
மேலும் செவ்வாய்க்கிழமை என்பது அங்காரகனுக்கு உரிய கிழமையாக கருதப்படுவதால் ஆடிச் செவ்வாய் அன்று நாம் விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம் கடன் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்குரிய தினமாக கருதப்படுவதால் அன்றைய தினம் அதாவது ஆடி வெள்ளி அன்று நாம் வீட்டில் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதன் மூலம் செல்வ நிலை உயரும் என்று கூறப்படுகிறது.
இந்த மூன்று கிழமைகளையும் மறவாமல் ஆடி மாதம் முழுவதும் நாம் வழிபாடு செய்து அம்மன் அருளும் குலதெய்வத்தின் அருளும் அதே சமயம் குருபகவானின் அருளும் பரிபூரணமாக பெறலாம்.
கடன் தீரவும், செல்வநிலை உயரவும், மங்களகரமான காரியங்கள் வீட்டில் தடை இன்றி நடைபெறவும் ஆடி மாதத்தில் வரக்கூடிய இந்த மூன்று கிழமையும் நாம் உபயோகப்படுத்தி இந்த மூன்று கிழமையும் வழிபாடு மேற்கொண்டு சிறப்பான வாழ்க்கையை வாழ்வோம்.
Leave A Comment