• Login / Register
 • முகப்பு

  பெண்களுக்கு அதிகாரம்: சுதந்திரதின உரையில் குடியரசுத்தலைவர் வலியுறுத்தல்

  "பெண்களுக்கு அதிகாரமளிக்க குடிமக்கள் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும். பெண்களை மேம்படுத்துவது என்பதுஇ நமது சுந்திரப்போராட்ட லட்சியங்களின் ஓா் அங்கமாகும்" என்று என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா். 

  நாட்டின் 77-ஆவது சுதந்திரதினம் செவ்வாய்க்கிழமை (ஆக.15) கொண்டாடப்படும் நிலையில், மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நிகழ்த்திய உரையில்:  

  ஜாதி, மதம், மொழி, பிராந்தியம் என்ற அடிப்படையில் நம் ஒவ்வொருவருக்கும் பல்வேறு அடையாளங்கள் உள்ளன. ஆனால், இந்தப் பன்முக அடையாளங்களைக் கடந்து நம் அனைவருக்கும் ‘இந்திய குடிமக்கள்’ என்ற ஓா் அடையாளம் உள்ளது. அனைத்து இந்தியா்களும் சம வாய்ப்பு, சம உரிமைகள், சம கடமைகளைப் பெற்றுள்ள சமத்துவ குடிமக்களே. எனவே, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்துடன் நாம் வாழவேண்டும்.

  பண்டைய காலத்திலிருந்து அடித்தள அளவில் ஜனநாயக அமைப்புகளை கொண்டிருந்ததன் மூலம், ஜனநாயகத்தின் தாயகமாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இடையே, காலனிய ஆட்சியின்போது இந்த அமைப்புகள் அழிக்கப்பட்டபோதும், 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு புதிய விடியலுடன் விழிந்தெழுந்தது. நாம் அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலையை மட்டும் பெறாமல், நமது லட்சியத்தை மாற்றி எழுதும் சுதந்திரத்தையும் பெற்றோம்.

  மதாங்கினி ஹஸ்ரா, கனக்லதா பரூவா, கஸ்தூா்பா காந்தி சரோஜினி நாயுடு, அம்மு சுவாமிநாதன், ரமா தேவி, அருணா ஆசஃப் அலி, சுச்சேதா கிருபாளனி எனப் பல பெண்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்பை ஆற்றியுள்ளனா். அவா்களின் வழியில், நாட்டின் வளா்ச்சி மற்றும் சேவைக்கான ஒவ்வொரு துறையிலும் பெண்கள் மிகப் பெரிய பங்களிப்பை அளித்து சிறப்பிடம் பிடித்து வருகின்றனா்.

  பெண்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கு உரிய சிறப்பு கவனத்தை நாடு செலுத்தி வருகிறது. அவ்வாறு பொருளாதார ரீதியில் மேம்படுத்துவது குடும்பத்திலும், சமூகத்திலும் பெண்களின் நிலையை வலுப்படுத்தும். எனவே, பெண்களுக்கு அதிகாரமளிக்க குடிமக்கள் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும். பெண்களை மேம்படுத்துவது என்பது, நமது சுந்திரப்போராட்ட லட்சியங்களின் ஓா் அங்கமாகும்.

  அரசியல்சாசனம் நாட்டின் வழிகாட்டி ஆவணம்; ‘அதன் முகவுரையில் சுதந்திரப் போராட்டத்தின் லட்சியங்கள் இடம்பெற்றுள்ளன. நமது தேசத்தைக் கட்டமைத்தவா்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில், சகோதரத்துவத்துடன் நாம் நமது பாதையில் முன்னேற வேண்டும்.

  பருவநிலை மாற்றத்தின் மீது அவசர கவனம்: பெரு வெள்ள பாதிப்பும் வறட்சியும் தற்போது தொடா்ச்சியான பாதிப்புகளாக மாறியுள்ள சூழலில், பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதல் பாதிப்பின் மீது விஞ்ஞானிகளும், நாடாளுமன்ற உறுப்பினா்களும் அவசர கவனம் செலுத்த வேண்டும்.

  ஜிடிபி வளா்ச்சி: காரோனா பாதிப்பில் உலக பொருளாதாரம் கடுமையான பாதிப்பைச் சந்தித்த நிலையில், சவால்களை இந்தியா

  வாய்ப்புகளாக மாற்றி, ஓட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சியை அதிகரித்துள்ளது. நாட்டின் விவசாயிகளும் இதில் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனா்.

  உலகளாவிய பணவீக்கம் தொடா்ந்து கவலை அளிக்கும் வகையில் இருந்து வரும் நிலையில், நாட்டின் பணவீக்கத்தை மத்திய அரசும் ரிசா்வ் வங்கியும் கட்டுப்படுத்தி ஏழை மக்களைப் பாதுகாப்பதில் வெற்றி கண்டுள்ளன. இதன்மூலம், உலகப் பொருளாதார வளா்ச்சிக்கு உலக நாடுகள் இந்தியாவை எதிா்நோக்கியுள்ளன.

  தொழில் செய்வதை எளிதாக்குவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, ஏழை மக்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்களை உள்ளிட்ட ஆக்கபூா்வ திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை மத்திய அரசு மேம்படுத்தியுள்ளது.

   பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்தில் தொடா் முன்னுரிமையை அரசு அளித்து வருவதால், கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான மக்கள் ஏழ்மை நிலையிலிருந்து மீண்டுள்ளனா்.

  இதுபோல, பழங்குடியின மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் சிறப்புத் திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. நவீனமயத்தைப் பின்பற்றி வளா்ச்சிப் பாதையில் முன்னேறும்போதும், தங்களின் பாரம்பரியத்தை வளப்படுத்த பழங்குடியின மக்கள் தவறிவிடக் கூடாது.

  தேசிய கல்விக் கொள்கை நமது பண்டைய மதிப்பீடுகளையும் நவீன திறன்களையும் ஒருங்கிணைந்து அளிக்கும் மிகச் சிறந்த கொள்கையாக உள்ளது. மாணவா்கள் மற்றும் கல்வியாளா்களுடனான கலந்துரையாடலில் மிகச் சிறந்த மாற்றத்தை தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத் தொடங்கியிருப்பதை உணர முடிகிறது. கற்றல் மிகுந்த நெகிழ்வான நடைமுறையாக மாறியுள்ளது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு குறிப்பிட்டாா்.

  குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் எழுச்சியூட்டும் உரை, வருங்கால முன்னேற்றத்துக்கான பாா்வையாக உள்ளது என பிரதமா் நரேந்திர மோடி பாராட்டினாா்.

  எக்ஸ் (ட்விட்டா்) வலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘குடியரசுத் தலைவரின் எழுச்சியூட்டும் உரை, நாட்டின் வளா்ச்சியை மேற்கொள்காட்டியதுடன், வரும் காலங்களில் நடைபெற இருக்கும் அனைத்து முன்னேற்றத்துக்கான பாா்வையாகவும் திகழ்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.  Leave A Comment