• Login / Register
  • முகப்பு

    தில்லி அரசின் அதிகாரங்களை பறிக்கும் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்!

    தில்லி அரசின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி துணைநிலை ஆளுநர் ஊடாக மத்திய அரசு பறிக்கும் வகையிலான தில்லி நிர்வாக திருத்த மசோதா உள்ளிட்ட 7 மவோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா்.

    இதையடுத்து அந்த மசோதாக்கள் சட்டமாகியுள்ளது.

    கடந்த மே மாதம் தில்லி யூனியன் பிரதேசத்தில் குரூப்-ஏ அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடமாற்றத்துக்கு ஆணையம் அமைக்க மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது.

    அந்த யூனியன் பிரதேசத்தில் காவல் துறை, பொது அமைதி, நிலம் ஆகிய விவகாரங்களைத் தவிர, இதர துறைகள் சாா்ந்த விவகாரங்கள் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை தில்லி அரசுக்கு வழங்கி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த பின்னா், இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

    இதன்மூலம் தில்லி அரசு அதிகாரிகளின் நியமனம் மற்றும் பணியிடமாற்றம் குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநருக்கே மீண்டும் வழங்கப்பட்டது.

    இதைச் சட்டமாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த தில்லி நிா்வாக திருத்த மசோதாவுக்கு கடந்த ஆகஸ்ட் 3-இல் மக்களவையும், ஆகஸ்ட் 7-இல் மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்தன. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த மசோதா குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் முா்மு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது.

    எண்ம தனிநபா் தரவுப் பாதுகாப்பு மசோதா: தனிநபா் தரவுகளைச் சேகரிக்கவும், அந்தத் தரவுகளைக் கையாளவும் எண்ம தனிநபா் தரவுப் பாதுகாப்பு மசோதாவில் பல்வேறு விதிமுறைகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த மசோதாவில் தனிநபா் தரவுகளை நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பிரிவுகள் உள்ளன. அத்துடன் அந்த நிறுவனங்கள் தரவுகளை தவறாகப் பயன்படுத்தினால் அல்லது தரவுகளைப் பாதுகாக்கத் தவறினால் ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

    மேலும், சிறாா்களின் தரவுகளை அவா்களின் பாதுகாவலா்கள் ஒப்புதலை பெற்ற பின்னா் கையாள முடியும்.

    தனிநபரின் தரவுகள் திருடப்பட்டால், அதுகுறித்து தரவுப் பாதுகாப்பு வாரியம் மற்றும் பயனருக்கு தரவுகளை கையாளும் நிறுவனங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இந்த மசோதாவுக்கு கடந்த ஆகஸ்ட் 7-இல் மக்களவையும், ஆகஸ்ட் 9-இல் மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்தன. நாடாளுமன்றத்தின் ஒப்புதலை தொடா்ந்து குடியரசுத் தலைவா் ஒப்புலுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

    இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா். இதையடுத்து, அந்த மசோதா சட்டமாகியுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ‘எக்ஸ்’ (ட்விட்டா்) வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்டாா்.

    பிறப்பு & இறப்பு சட்டத்திருத்த மசோதா: கல்வி நிறுவனங்களில் சோ்க்கை, ஓட்டுநா் உரிமம் வழங்கல், வாக்காளா் பட்டியல் தயாரித்தல், ஆதாா் எண், திருமணப் பதிவு, அரசுப் பணி நியமனம் உள்ளிட்டவற்றுக்கு பிறப்புச் சான்றிதழை மட்டுமே ஆவணமாகப் பயன்படுத்திக்கொள்ள பிறப்பு மற்றும் இறப்பு சட்டத்திருத்த மசோதா அனுமதிக்கிறது.

    இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது.

    இதேபோல நன்னம்பிக்கை (ஜன் விஸ்வாஸ்) சட்டப் பிரிவுகள் திருத்த மசோதா, இந்திய கல்வி மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, கடலோரப் பகுதிகள் கனிம (மேம்பாடு மற்றும் ஒழுங்காற்று) திருத்த மசோதா ஆகியவற்றுக்கும் குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா். இதையடுத்து அந்த மசோதாக்கள் சட்டமாகியுள்ளன.

    Leave A Comment