75 டாஸ்மாக் பார்களுக்கு சீல்; சட்டவிரேதமாக இயங்கியமை கண்டுடிபிடிப்பு!
உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாக செயற்பட்டுவந்த 75 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டன.

திருவள்ளுர் மாவட்டத்திற்குட்பட்டு சட்டவிரோதமாக செயற்பட்டுவந்த 75 டாஸ்மாக் பார்களே இவ்வாறு சீல்வைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயத்திற்கு பலர் பலியாகியிருந்தமை தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தஞ்சாவூரில் உள்ள அரசு டாஸ்மாக் பார் கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த இருவர் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் சட்டவிரோத மது விற்பனைக்கு அரசு மற்றும் அரசியல் தரப்பு ஒத்துழைப்பு இருப்பதே காரணம் என்ற விமர்சனம் வலுவடைந்துள்ளது.
அரசு டாஸ்மாக் பாரில் இருவர் உயிரிழந்தது மற்றும் கள்ளச்சாராயத்தால் 23 பேர் உயிரிழந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பணியாற்றி வந்த 16 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 42 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதேபோன்று தமிழக முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த பணியிட மாற்றங்களுக்கு கள்ளச்சாராய விவகாரமே முக்கிய காரணமாக கூறப்பட்டது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் பல கடைகள் இயங்கி வருகின்றன. அந்த கடைகளுக்கு விதிமுறைகளை அரசு நிர்ணயம் செய்து வருகிறது. அந்த வகையில் மதுபானங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட அதிகமாக விற்பது, அரசு நிர்ணயித்த நேரத்தை விட அதிக நேரம் கடை திறந்திருப்பது போன்ற விதிமீறல்களுக்கு துறை ரீதியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
அதன்படி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 75 டாஸ்மாக் பார்கள் அனுமதியின்றி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் 75 டாஸ்மாக் பார்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
Leave A Comment