• Login / Register
  • முகப்பு

    ரூ.2000 நோட்டுகளுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்; RBI விளக்கம்!

    ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் அது தொடர்பில் ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

    நாட்டில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் எதிர்வரும் செப்டெம்பர் 30ம் தேதிக்கு பின்னர் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி கடந்த தினத்தில் அறிவித்திருந்தது.

    இதனால் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை மாற்றுவதற்கு மும்முரம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கிடைக்கும் சந்தரப்பங்களினூடாக கைவசம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை எப்படியாவது விரைவில் மாற்ற வேண்டும் என்ற பரபரப்பு நாட்டு மக்களை ஆட்டிப்படைத்துள்ளது.

    இந்நிலையில், நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19ஆம் தேதி அறிவித்தது. அதில், மக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் 4 மாத காலத்துக்குள், அதாவது செப்டம்பர் 30ம் தேதிக்குள் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    இதன்படி, வங்கிகளில் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளும் பணிகள் இன்று (23) தொடங்குகின்றன.

    நாளொன்றுக்கு அதிகபட்சமாக 10 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கு கட்டுப்பாடு கிடையாது எனவும், எத்தனை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வேண்டுமானாலும் வழங்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு எந்த அடையாளச் சான்றையும் அளிக்க வேண்டிய அவசியமில்லை என பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.

    இதனிடையே, அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நாள்தோறும் எவ்வளவு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுகிறது, எவ்வளவு டெபாசிட் செய்யப்படுகிறது என்பது குறித்த தகவல்களை பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது வழக்கமான நடைமுறைதான் எனவும், அவற்றை மாற்ற அவசரப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கவில்லை எனவும், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பண பரிவர்த்தனையில் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் சக்தி காந்த தாஸ் தெளிவுபடுத்தினார்.

    இந்நிலையில், அரசுப்பேருந்துகளில் பயணச்சீட்டு வாங்குவதற்காக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் பெற்றுக் கொள்ளப்படும் என போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.

    இதே போல, பெட்ரோல் நிலையங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழக்கம்போல பெற்றுக்கொள்ளப்படும் என பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment